Sunday, July 27, 2008

அம்மா... பாலகுமாரனின் நினைவுகள்


‘தோடுடைய செவியன்’ அம்மா பாடினாள்.
‘டுடைய என்றால் என்ன?’ என்று நான் கேட்டேன்.
‘தோடு உடைய செவியன்’ என்று அம்மா பிரித்து சொன்னாள்,

அடடா!! இப்படித்தான் தமிழைப் பிரித்துப்படிக்க வேண்டுமா? எனக்கு எட்டு வயதில் தமிழை எப்படி பிரித்துப் படிப்பது என்பது புரிந்துப் போயிற்று. தமிழ் சிக்கலாக இருந்தாலும் எப்படி பிரிப்பது என்பதை நான் யோசித்துப் பார்க்க கற்றுக் கொண்டேன்.

அம்மா நாயன்மார் கதைகளை சொன்னார், திருவிளையாடல் புராணம் சொன்னார். ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை விளக்கினார். எனக்கு பத்து வயது. அம்மாவும் நானும் சமையற்கட்டில் இருந்தபடி பேசிக்கொண்டே இருப்போம். பலதும் நான் கற்றுக்கொண்ட இடம் சமையற்கட்டு.


‘பாலகுமாரனைப் பற்றி கவலைப்படாதே சுலோச்சனா அவன் விழுந்து புரண்டு எழுந்து வருவான். எல்லோருமே பிறக்கின்ற பொழுது ஞானியாக பிறப்பதில்லை.நடுவில் சில விஷயங்கள் மனிதர்களை மாற்றும். உயரத் தூக்கி வைக்கும்’ என்று என் உறவுக்காரர் என் முகத்தைப் பார்த்தப்படியே சொன்னார். ‘இவனைதானே மகாப்பெரியவாள் முன்னாடி போய் நிறுத்தினே’ என்று கேட்டார், அம்மா, ஆம் என்று தலை அசைத்தாள், அது பற்றி அம்மாவிடம் வினவினேன். சென்னை சமஸ்கிருத கல்லூரியில் மகாபெரியவாள் முகாமிட்டிருந்தபோது அங்கே தனியே அமர்ந்திருந்த அவரிடம் என்னை கொண்டு போய் நிற்க வைத்து நமஸ்கரிக்க சொல்லி, ‘நீங்கள் இவனை ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று அம்மா கேட்க, மகாப்பெரியவாள் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மறுபடியும் அம்மா மெல்ல போய் கேட்க 'நீ இவனை கருவுற்றிருக்கும் போதே தடவி தடவி ஆசீர்வாதம் செய்திருக்கிறாய். அது போதும், அது இவனை நல்ல இடத்திற்கு கொண்டு வரும்’ என்று அவர் சொன்னாராம். அம்மா இதை சொல்ல, உண்மையா என்று கேட்க, அம்மா சிரித்துக் கொண்டே நகர்ந்து போனார்.




கார்ட்டூன் என்ற சித்திர கதைகளை தன்னுடைய பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுப்பாள். முழு ஆங்கிலத்தையும் உரக்க படிக்க சொல்வாள்.நான் படிப்பில் சுமாராக இருந்தாலும், மொழிகள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட அவளே காரணம். பதிமூன்று வயதில் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கக் கொடுத்து, ஆழ்ந்து படி. உன்னை இது எங்கேயோ கொண்டு போகும் என்று சொன்னாள். சுற்றுசூழ்நிலை மறந்த ஒரு நிலைìகு கொண்டு போகும் என்று நினைத்து நான் அதைப் படித்தேன். எங்கேயோ கொண்டு போகிறது அம்மா என்று அவள் வாக்கியத்தை சொன்னேன். என்ன புரிந்தது என்று கேட்டாள். எல்லாம் புரிந்தது என்று சொன்னேன். எந்த இடம் பிடித்தது என்று கேட்டாள். வந்தியத்தேவனும் குந்தவையும் காதலித்த இடம் எனக்கு பிடித்தது என்று கூறினேன். ஏன் பிடித்தது என்று கேட்டாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொடாமல் பேச்சிலேயே காதலிக்கிறார்கள் என்று சொன்னேன். ‘பதிமூன்று வயதில் இது புரிந்துப் போயிற்றா நீ மிகவும் சிரமப்படுவாய். அதனால் என்ன. சிரமப்படுவதில் தவறில்லை. புரிந்து கொள்ளுவது தான் முக்கியம்’ என்று சொன்னாள்.



பதினாறு வயதில் இராமாயண சொற்பொழிவுக்கு போய் கொத்தமங்கலம் சுப்பு அவர்களிடம் சில குறுக்கு கேள்விகள் கேட்டு விளக்கம் கேட்க, ‘அதற்கு உனக்கு வாழ்க்கை பதில் சொல்லும். நான் சொல்லமுடியாது. ஆனால் சபையில் தைரியமாகக் கேள்வி கேட்டதற்கு என் அன்புப் பரிசு’ என்று பெரிய மாலையை என் கழுத்தில் போட்டார். நான் அந்த மாலையோடு அம்மாவிடம் போய் நின்றேன். என் கழுத்தில் விழுந்த முதல் மாலை என்று அவள் வாய் திறந்து சொன்னாள். இ ன்று நல்ல நாள், உனக்கு மாலை போட்டவர் மிக நல்ல மனிதர், நீ வாழ்வாங்கு வாழ்வாய் என்று ஆ சிர்வதித்தார். அ ந்த மாலை நாராகி என் வீட்டில் வெகுநாள் வரை தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் குப்பையில் போட அ ம்மா முயலவே இல்லை.




அப்பாவின் காட்டமான, ஆ த்திரமான, அசூயையான பேச்சிற்கு அம்மா பலமுறை இரையாகி இருக்கிறாள். ‘படிப்பு என்ன பெரிய படிப்பு, உன் படிப்புல நாய் .... ....’ என்ற வசவை அப்பா அடிக்கடி உபயோகப்படுத்துவார். ‘நான் வேறு என் படிப்பு வேறு.அதை ஏன் கேவலமாக பேசுகிறீர்கள்’ என்று அம்மா எதிர்த்த போது, ‘அப்படியா உன் படிப்பு தலையில இரண்டு அடி போடறேன், என்று சொல்லி அவள் கன்னத்தில் அறைந்தார். ‘நான் உன்னை அடிக்கலையே உன் படிப்பைதானே அடிச்சேன்’ என்று சொல்ல, நான் விக்கித்துப் போய் நின்றேன். முரட்டுத்தனமாய் அவரிடம் முட்ட முயன்ற போது, தடுத்தபோது, “முட்டினால் அவர்களுக்கு புரியாது, முரண்டு செய்தால் அவர்களுக்கு புரியாது.வாழ்க்கை அவர்களுக்கு பாடம் சொல்லித்தரும். முரடர்களை ஊன்றிக் கவனித்துப்பார், உன்னிடமிருந்த முரட்டுத்தனம் விலகும்” என்று சொன்னார்.



இருபத்தியோரு வயது. நான் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். என் வீட்டிற்கு ஒரு உறவினர் வந்தார். மின்சாரம் தடைப்பட்டதால் ஹரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்தோம். இதற்கு ஏன் ஹரிக்கேன் விளக்கு என்று பெயர் தெரியுமா? என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. நான் யோசித்தேன் ஒளி நிரம்பியதால் இதற்கு ஹரிக்கேன் என்று பெயர் என்று சொன்னேன், புரியவில்லையே என்று சொன்னார். ஹரி என்றதால் ஒளி என்று பெயர் அதனால் இது ஒளி நிரம்பிய பாத்திரம் கேன் பாத்திரம். கெரசின் வாங்குகிற டப்பா என்பதாக நான் சொன்னவுடன் அவர் வாய்விட்டு சிரித்தார். ஹரிக்கேன் என்பது ஒரு புயல். அமெரிக்காவில் வீசும் புயலுக்கு ஹரிக்கேன் என்று பெயர். சியாவில் வீசும் புயலுக்கு சைக்லோன் என்று பெயர். ஹரிக்கேன் என்ற புயலை தாங்கும் வண்ணம் அமைத்ததால் இதற்கு ஹரிக்கேன் லேம்ப் என்று பெயர் என்று சொன்னார். வீடு விழுந்து விழுந்து என்னுடைய விளக்கத்திற்கு சிரித்தது, அம்மாவும் சிரித்தாள். எல்லோரும் போன பின்பு ‘உன்னுடைய விளக்கமும் நன்றாக இருந்தது என்று ஒளி நிரம்பிய பாத்திரம் ஹரிக்கேன் என்று சொன்னாயே. உன்னுடைய கற்பனை எனக்கு பிடித்திருக்கிறது’ என்று சொன்னாள். நான் தவறு செய்தாலும் என் அம்மா என்னை கிறங்கிப் போய் கேட்டிருக்கிறாள். இதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்; காதார அனுபவித்திருக்கிறேன்.




அம்மா என்பவள் மகள் வடிவம்; மகள் என்பவள் அம்மாவின் ரூபம் என்று உணர்ந்திருக்கிறேன். என் அம்மாவிற்கு வயதாகிவிட்டது. இந்த மார்கழி தாண்டாது, இந்த பொங்கலுக்கு உயிரோடிருக்க மாட்டேன், இந்த தீபாவளிக்கு நானில்லை என்றெல்லாம் பல நூறு முறை சொல்லி எண்பத்து மூன்று வயது வரை திடகாத்திரமாகவே வாழ்ந்தாள். மூப்பின் காரணமாகத் தான் ஹ்ருதயம் தவித்ததே தவிர பெரும் நோய் எதுவும் அவளை தீண்டவில்லை. அம்மா என் தங்கையோடு என் வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இன்னொரு வீட்டில் இருந்தாள். என்ன தோன்றியதோ தெரியவில்லை.‘நான் உன்னோடு சில நாட்கள் இருக்கிறேன்’ என்று தனது பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு என்னிடம் வந்து விட்டாள்.



என் வீடு விசாலமானது. அவளை அன்போடு ஏற்றுக் கொண்டது. என் மனைவியர் இருவரும் என் அம்மாவின் மீது அன்பு மழை பொழிந்தார்கள். அவளுக்கு ஓடி ஓ டி உதவிகள் செய்தார்கள். என் அம்மாவும் ஒரு தமிழ் பண்டிதையைப் போல பள்ளிக்கூடத்து ஆ சிரியைப் போல கம்பீரமாக அந்த உதவிகளைப் பெற்றுக்கொண்டாள். வீட்டிற்கு வெள்ளை அடிக்க பேச்சு வந்த போது ஒரு மூன்று நாள் தங்கை வீட்டில் இருக்கிறாயா என்று தெரியாமல் கேட்டு விட்டேன்.பெரிய கோபம் வந்து விட்டது. ‘என்னை இங்கிருந்து ஒழித்து விட தீர்மானம் செய்து விட்டாயா. நான் இங்கிருப்பது பிடிக்கவில்லையா. நான் தண்டசோறு என்று நினைக்கிறாயா. உனக்கு நான் பாரமாக இருக்கிறேனா’ என்று வேகமாக வார்த்தைகளை அடுக்கினாள். என் அம்மாவின் குணம் இது. எப்பொழுது கொஞ்சுவாள், எப்பொழுது சீறுவாள், எதற்கு கொஞ்சுவாள், எதற்கு சீறுவாள் என்று கணிக்கவே முடியாது.




அம்மாவை நாங்கள் எல்லோரும் சேர்ந்து சமாதானப்படுத்தி, தூசு தும்பு இருக்குமே என்று சொன்னோம் என்று சொல்ல, அது பற்றி அக்கறை இல்லை என்று சொல்லி விட்டாள். வீடு வெள்ளையடிப்பு நடந்தது அம்மா அந்த தூசுக்கு நடுவே மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தாள். அந்த வேலையாட்களையும் அதட்டி வேலை வாங்கி கொண்டிருந்தாள். ‘எனக்கு இப்பத்தான் தெரிகிறது. நீ ஏன் போகமாட்டேன் என்கிறாய் என்று .கீழே வேலை செய்யறதுக்கு பத்துப்பேர் கிடைத்தால் போதும். உரத்தகுரலில் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கலாம் இல்லையா? டீச்சராகவே இருந்து பழகிடுச்சு இல்லையா?’ என்று கேட்க வாய் விட்டு சிரித்தாள். நான் அவளை கேலி செய்தாலும் அவளுக்கு பிடிக்கும்.

இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தடி ஊன்றி தன் கட்டிலை விட்டு இறங்கி ஹால் முழுவதும் நடந்து டைனிங் டேபிள் அருகிலே வந்து உட்கார்ந்து கொண்டாள். நாம் இரண்டு பேரும் சாப்பிடாலாமா என்று கேட்டாள். காலை சிற்றூண்டிக்கு என் எதிரே அமர்ந்து கொண்டாள். ‘இறப்பது என்றால் என்ன. மரணம் என்பது என்ன.மரணத்திற்கு பின் மனிதனுடைய நிலை எது.மரணம் வரும்போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டாள். நான் அமைதியாய் உட்கார்ந்திருந்தேன். ‘தெரிந்தால் சொல், தெரியவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம்’ என்று சொன்னாள். ‘எனக்குத் தெரியும், உனக்குத் தெரிய வேண்டுமா என்பது பற்றி யோசிக்கிறேன்’ என்று பதில் சொல்ல, ‘அதையும் நீயே முடிவு செய். எனக்கு தெரிய வேண்டாம் என்றால் வேண்டாம்’ என்று சொன்னாள், ‘இல்லை நான் சொல்கிறேன்’ என்று பதில் சொன்னேன். பதில் சொல்லும் போதே உள்ளே ஆ டிற்று. மரணம் பற்றியும், அது வருகிற விதம் பற்றியும், மரணத்திற்கு பின் மனதின் நிலை பற்றியும், மனம் எதனோடு சேர்ந்து கொள்ளும் என்பது பற்றியும் நான் மெல்ல விவரித்தேன். அம்மா அசையாமல் கேட்டு கொண்டிருந்தாள். மெல்ல பேச்சு முடித்து அவளைப் பார்த்தேன். அவள் பதில் கூறாமல் எழுந்து தன்னுடைய படுக்கைக்கு போனாள். குழப்பம் அடைந்து விட்டாளோ. கோபம் அடைந்து விட்டாளோ என்று தோன்றி நான் பின்னாலேயே போனேன். வேறு ஏதேனும் கேள்விகள் உண்டா என்றேன். இல்லை, எவ்வளவு அழகாக ஒரு விஷயத்தை சொல்கிறாய், எத்தனை தெளிவாக யோசிக்கிறாய், உன்னை நினைத்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. உன் எதிரே அழுதால் நான் மரணத்திற்க்கு பயந்து அழுகிறேன் என்று நினைத்துக்கொள்வாய், நான் இப்படிப்பட்ட புத்திசாலியான பிள்ளையைப் பெற்றேனே என்று கண்கலங்குகிறேன். அதனால்தான் இங்கே வந்து விட்டேன். நீ போ. நான் கொஞ்சம் அழுகிறேன் என்று சொல்லி என்னை துரத்தி விட்டாள். எனக்கு அழுவதா? சந்தோஷப்படுவதா? தெரியவில்லை.

அம்மா இறந்தாள்.



நான் அழுதேன்.

அம்மாவை ஹாலில் கிடத்தியிருந்தார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர் தேவக்கோட்டை வா. மூர்த்தி வந்தார். அவரைப் பார்த்ததும் அம்மாவின் நினைப்பு அதிகரிக்க அழுதேன். தேவக்கோட்டை வா. மூர்த்தியை தனது இரண்டாவது மகன் என்று அம்மா அடிக்கடி சொல்வார். என்னுடைய சகோதரன் போன்ற நினைப்பு எழுந்ததால் அழுதேன். அம்மாவை வேனில் வைத்து அடையார் மின்சார சுடுகாட்டிற்கு எடுத்து போனோம். அம்மாவை அங்கு கிடத்தியிருந்தார்கள்.அடுத்த சிதைக்காக காத்திருந்தார்கள். அம்மாவுக்கு அருகில் உட்கார்ந்த படி, அம்மாவையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன், மிக ஆ சையாய் அவள் நெற்றியை, முகவாயை, தோள்பட்டையை தொட்டு தடவி விட்டேன். எத்தனை அழகு,எத்தனை அமைதி, எத்தனை அனுபவம் என்று பெருமிதப்பட்டேன். அம்மாவை தண்டவாளம் போன்ற இடத்தில் வைத்து, வயிற்றில் வரட்டி வைத்து, மேலே கற்பூரம் வைத்து என்னை கொளுத்தச் சொன்னார்கள். சீதைக்கு தீ மூட்டியது போல அந்த கற்பூரத்தை ஏற்றினேன். அம்மாவை சடேர் என்று உள்ளே தள்ளினார்கள். நெருப்பு உள்ளே வாங்கி கொண்டது, அம்மாவை விழுங்க துவங்கியது. நான் கதறினேன்.



என்னைப் பலரும் தாங்கிப்பிடித்து சமாதானம் செய்தார்கள். அதற்கு பிறகு நான் அழவில்லை. ஏனெனில் அம்மா தனியாக இல்லை. என்னோடு இரண்டற கலந்து விட்டார். இன்றைய என் தமிழ் அம்மா எனக்கு பிச்சையிட்ட தமிழ். என் தமிழில் அம்மா இருக்கிறார்.

Sunday, July 20, 2008

சிலை சொல்லும் செய்தி - நான்கு

ஐயா, எப்பொழுதும் சோழர்காலத்து சிலைகள் பற்றியே பேசுகிறீர்கள். உங்களுக்கு வேறு தேசத்து சிலைகள் பற்றி எதுவும் தெரியாதா?



உங்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. அதனால் என்னை தெரியாதா என்று கேள்வி கேட்கிறீர்கள். எனக்கு தெரிந்ததை, அதிகம் தெரிந்த உங்களுக்கு சொல்கிறேன்.


படப்பிடிப்புக்காக ஹைதராபாத்திற்கு பலமுறை போயிருக்கிறேன். ஹைதராபாத்து நகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள பிலிம்சிட்டியில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், நேரம் கிடைக்கும்போது ஹைதராபாத்திற்கு வந்து அங்குள்ள சலார்ஜங் மியுசியத்திற்கு ஓடிவிடுவேன். சலார்ஜங் மியுசியத்தில் 'வேல் ஆப் ரபாக்கா' முகத்திரை அணிந்த ரபாக்கா என்கிற பெண்ணின் சலவை கல் சிற்பம் இருக்கும். இருநூறு வருடங்களுக்கு முன்பு செதுக்கிய ஒரு சலவை கல் சிற்பம். முகத்திரை அணிந்த அந்த பெண்ணின் மூக்கு, மூக்கின் குழி, கண்ணின் இமை, கண்ணின் விழிப்பு, கன்னம், உதடு என்று தெளிவாக தெரியும். முகத்திரையும் தெரியும், முகத்திரைக்கு உள்ளுக்குள் இருக்கிற அமைப்புகளும் தெரியும். எப்படி ஒரு சிற்பி இதை செதுக்கினான் என்று எனக்கு புரியவே இல்லை. சலவைகல்லின் காவியம் 'வேல் ஆப் ரபாக்கா'. தயவு செய்து ஹைதராபாத் போனால், கோவில்களுக்கு அப்புறம் போங்கள். சலார்ஜங் மியுசியத்தில் உள்ள இந்த சிலையை மட்டும் பார்த்துவிட்டு, நமஸ்கரித்து விட்டு வாருங்கள். தேவதையா என்று கேட்காதீர்கள். அற்புதமான கலைப் படைப்புகள் எல்லாமும் தேவதைக்கு சமானம். அதை படைத்தவன் கடவுளுக்கு சமானம்.