Tuesday, June 30, 2009

குருவா ? அனுபவ அறிவா ?

ஐயா, குரு அவசியமெனில் என் அனுபவ அறிவால் என்ன பயன்?

எது உங்களது அனுபவ அறிவு ?


உங்களுக்கு நேற்று ஒருவரை பிடித்திருக்கிறது. இன்று அவரை பிடிக்கவில்லை. நீங்கள் நேற்று ஒரு இயக்கத்தில் சேர்ந்திருப்பீர்கள். இன்று வேறு இயக்கத்திற்கு மாறிவிட்டீர்கள். நீங்கள் வேறு ஒரு நிறத்தை ஆதரிப்பவர்களாய் இருந்தீர்கள். இன்று மற்றொரு நிறத்தை பிடித்துக் கொண்டிருக்கிருக்கிறீர்கள். உங்கள் அனுபவ அறிவு என்பதின் தரம் மாறிக் கொண்டே இருக்கிறது. உங்களுக்கு எது உண்மையில் தேவைப்படுகிறது என்கிற அறிவை உங்கள் அனுபவம் தரவேயில்லை. அந்த அனுபவத்திலிருந்து திரண்டு வரும் அறிவை நீங்கள் ஜீரணம் செய்யவே இல்லை. ஒரு குரு உங்கள் அனுபவத்திலிருந்து கிளர்ந்து எழுந்த அறிவை சீர்ப்படுத்தி அதில் எது சாரம் என்பதை சுட்டிக் காட்டுவார். ஏனெனில் தன் அனுபவத்திலிருந்து தன் வாழ்க்கை சாரத்திலிருந்து கடவுள் தேடுவதை மையமாக்கி அவர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர். அந்த நிலைப்படுத்தலை தான் உங்கள் அனுபவ அறிவு உங்களுக்கு தந்திருக்க வேண்டும். அப்படி நிலைப்படுத்த முடியாமல் தடுமாறித் தவித்துக் கொண்டிருக்கின்ற போது உங்கள் அனுபவத்தின் சாரத்தை உங்களுக்குள் தேக்கி வைத்து உங்களை ஒரு நிலைப்படுத்துவார். இந்த நிலைப்படுத்துதல் என்பது எந்த அனுபவத்தையும் நடுநிலையிலிருந்து பார்க்கின்ற வல்லமை உடையது. எதையும் சாராதது. இடது வலது திரும்பாதது. எல்லா நேரத்திலும் மிக மென்மையாய், பொறுமையாய், கவனமாய் சீர்தூக்கி சமநிலையில் இருப்பது. எந்தவித உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் ஆட்படாதது. இந்த நிலையை, இந்த பக்குவத்தை உங்கள் அனுபவ அறிவு கொடுக்குமாயின் நீங்கள் குரு. கொடுக்க மறுக்குமாயின் உங்கள் தேடல் குருவை நோக்கி இருக்க வேண்டும். குரு மட்டுமே உங்களுக்கு இந்த நடுநிலையை, சீர்தூக்கி பார்க்கும் செம்மையை தர முடியும்.

அனுபவ அறிவு என்பது தேடல். தேடலில் தெளிதல் என்பது குருவின் ஆசி. குரு கொடுக்கும் வரம்.

இந்தக் கேள்வியே நீங்கள் இரண்டாக இருக்கிறீர்கள் என்பதை தெளிவாக்குகிறது. அனுபவ அறிவின் சாரம் இருந்திருப்பின் ஏதேனும் ஒரு வழியில் பயணப்பட்டிருப்பீர்கள். கேள்வியை மற்றவரிடம் கேட்கும் முன்பு உங்களை உலுக்கிக் கேட்டுக் கொள்ளுங்கள். உள்ளுக்குள் உண்மையாய் ஆழ்ந்து பாருங்கள். வெற்று சமாதானமாகவோ வார்த்தை முழக்கங்களாகவோ இல்லாது உள்ளே சத்தியமாய் இருங்கள். தனக்கு உண்மையாய் இருத்தல் தான் ஒரு குருவின் போதனை. இது எளிதல்ல.

Sunday, June 28, 2009

உடையார் - ஒரு முன்னுரை - பாகம் இரண்டு

உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் எப்படியிருப்பார் கருப்பா, சிகப்பா, குட்டையா, நெட்டையா, ஒல்லியா என்று யாருக்கும் தெரியாது. சில சித்திரங்களும், சில சிலைகளும் அவர் இவ்விதமாக இருப்பார் என்று காட்டிகின்றன.அந்தச் சிலைகளிலிருந்து அவர் நிறமும், நடையும், உடையும், பாவனையும் வெளி வந்துவிடாது. படம் வெறும் அடையாளமாகத்தான் இருக்கும். அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு அதை என்னுள் தேக்கி அவர் இப்படி இருந்திருக்கக் கூடும் என்று நான் எழுதியிருக்கிறேன். அவருடைய மனைவிகள் இத்தனை பேர் என்று ஒரு கணக்கு இருக்கிறது. இது சொல்லப்பட்டிருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அதில் இவள் முக்கியமானவளாக இருந்திருப்பாள் என்று பல்வேறு காரணங்களை வைத்து ஒரு யூகம் செய்திருக்கிறேன்.

பட்டமகிஷிக்கோ, ராஜேந்திர சோழனை பெற்ற தாயார் வானதிக்கோ பள்ளிப்படை கோயில் இல்லை. ஆனால் பஞ்சவன் மாதேவி என்கிற பெண்மணிக்கு பள்ளிப்படைக் கோயில் இருந்திருக்கிறது. அதுவும் இராஜராஜ சோழனுடைய மகன் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. தந்தையினுடைய அனுக்கிக்கு கோவில் எழுப்புகிற அரசனின் செயலை உற்றுப்பார்க்கிறபோது அவள் அற்புதமான பெண்மணியாய் இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

பட்டமகிஷிக்கு, வானவன் மாதேவிக்கு பள்ளிப்படை இருந்திருக்கலாம். சிதிலமாயிருக்கலாம். பஞ்சவன் மாதேவி கோவிலும் கண்ணெதிரே இடிபட இருந்தது. யார் செய்த புண்ணியமோ, அதை இந்து அறநிலையத்துறை மறுபடியும் தூக்கிக் கட்டியிருக்கிறது.

மாதேவடிகள் என்று இராஜராஜசோழனின் மகள் ஒருத்தி கட்டியகோயில் சிதிலமான நிலையில் இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அது தரையோடு தரையாக மாறும். அதைத் காப்பாற்ற இன்னும் வேளை வரவில்லை. இந்தத் தமிழ்தேசத்தின் பல்வேறு சாபங்களில் இதுவும் ஒன்று. நம் பழம்பெருமைகளை, போற்றிப் பாதுகாக்காதது, போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது பெருங்குறை. மக்கள் எவ்வழி அவ்விதம் அரசு.

கவிதை என்றால் சினிமாப்பாட்டு. ஓவியம் என்றால் வாரப்பத்திரிக்கை. இலக்கியம் என்றால் வேண்டாத விஷயம். தியாகிகள் என்றால் கட்சித்தலைவர்கள் என்று மிகவும் சுருங்கிப்போன இந்த மக்களிடையே தமிழர்களின் பழம்பெருமையை கொஞ்சம் உரத்துக் கூறித்தான் ஞாபகப்படுத்த வேண்டும். கொஞ்சம் அலங்காரமாகப் பேசித்தான் தமிழ் உணர்வு ஊட்ட வேண்டும். ஹிந்தியை அழிப்பதால் தமிழ் வாழ்ந்து விடாது. தமிழை போற்றுவதால்தான் தமிழ் வாழும் என்பதை அவர்களுக்கு லேசாய் இடித்துரைக்க வேண்டும்.

ஆங்கிலப்படிப்பு மட்டுமே மேன்மையன்று. அதில் பேசுவதால் மட்டுமே ஞானம் வந்து விடாது. நம்முடைய தாய்மொழியான தமிழில் நுணுக்கங்கள் நிறைந்த பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. மனித உணர்வுகளை மிகத் துல்லியமாகத் காட்டுகின்ற அற்புதமான கவிதைகள் இருக்கின்றன. இப்படியும் யோசிக்க முடியுமா மனிதர்களால் என்று இன்றைக்கும் வியக்க வைக்கின்ற காவியங்கள் இருக்கின்றன. திரும்ப திரும்ப சொல்லப்பட்டதால் திருக்குறளுக்கு தமிழ் மக்களிடையே ஒரு மேன்மை வந்திருக்கிறது. ஆனால், ஸ்நேகம் வந்திருக்கிறதா. எனக்குச் சந்தேகமே. திருக்குறள் முக்கியமானதென்று என்று தலையில் வைத்துக்கொண்டு கூத்தாடுகிறார்கள். நெஞ்சுக்குள் இறக்கிக் கொள்கிறார்களா. கேள்விக்குறியே.

எனவே, தமிழ் மொழியின் தொன்மை மக்களுக்குத் தெரியாமல் போனது போல இந்தத் தமிழ் நாகரிகத்தினுடைய தொன்மை, பரப்பளவு, கனம் தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இவளை உணர்ச்சிப் பூர்வமாக நான் அணுகி இந்தச் சோழதேசத்து வரலாற்றைச் சொல்லியிருக்கிறேன்.

காதுகள் உள்ளோர் கேட்கக்கடவர். இதற்கொரு காது வேண்டியிருக்கிறது. இதற்கொரு விதமான சிந்தனை வேண்டியிருக்கிறது. இதற்கு ஒரு விதமான தாகம் வேண்டியிருக்கிறது. இதற்கு ஒரு தவிப்பு வேண்டியிருக்கிறது. இது எல்லோருக்கும் இருக்குமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. இருக்கின்ற சிலபேருக்கு எளிதாக்கி அரைத்துக் குடிப்பதற்கு கொடுக்க வேண்டுமல்லவா, அந்தச் செயலை நான் செய்திருக்கிறேன்.
தமிழ் நாகரிகத்தின் மேன்மையை ஒரு ஐரோப்பியர் பாழடைந்த கோயில்களுக்குள் ஏறி, உதவியாளர்களோடு கற்களின் மீது சுண்ணாம்புத் தடவி படித்து, படித்ததை எழுதி, மிகப் பெரிய குறிப்புகளாகச் செய்து வைத்திருக்கிறார் . திரு.ஹுல்ஷ் என்ற அந்த பிரிட்டானியப் பெருமகனுக்குத் தமிழ்தேசம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு திரு.நீலகண்ட சாஸ்திரியிலிருந்து இன்று மிகச்சிறப்பாக தனிமனிதனாக சரித்திர ஆராய்ச்சி செய்துவரும் டாக்டர் கலைகோவன் வரை, திரு. சதாசிவப் பண்டாரத்தாரிலிருந்து, அரசாங்க உத்தியோகஸ்தராக இருப்பினும் அதைத்தாண்டி சோழ தேசத்தின் மீது மாறாக காதல் கொண்ட டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம் வரை பல்வேறு நண்பர்களுடைய கடும் உழைப்பை நான் உள்வாங்கி கொண்டு உங்களுக்கு புரியும் வண்ணம் தேன் குழைத்துக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் எழுதிய கட்டுரைகளைத் திரும்ப திரும்ப படித்த போது தேன் சுவை போதையில் நான் பல வருடங்கள் திளைத்திருந்தேன்.

கட்டிரைகள் கொடுத்த போதையோடு நான் நேரே சென்று இந்த பெரிய கோயில் என்கிற கவினுரு பொக்கிஷத்தைப் பார்க்கும் போது இன்னும் வசமிழந்தேன்.

ஒருமுறையா, இருமுறையா முப்பது வருடங்களுக்கு மேல் எத்தனையோ முறை இந்தக் கோயிலை விதம் விதமாக சுற்றிப்பார்த்திருக்கிறேன். கல்வெட்டுக்களைத் தடவித் தேம்பியிருக்கிறேன். உற்சாகத்தில் குதித்திருக்கிறேன். அவ்வப்போது நண்பர்களை அழைத்து வந்து பார், இதைப்பார், அதைப்பார், அங்கே பார், இங்கே பார் என்று கூவலாய் பேசியிருக்கிறேன். கையிலே ஒரு தடியை வைத்துக் கொண்டு அந்த கோபுர வாசலில் நின்றபடி

“திருமகள்போல பெருநிலச் செல்வியும்
தமக்கே உரிமை பூண்டு மெனக்கொள
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி...

என்று கட்டியம்காரனாகக் கூவ ஆசைப்பட்டிருக்கிறேன்.

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவிலுக்குப்போய் இருண்டு பாழடைந்து கிடந்த இடத்தை நீரும், துடைப்பமும் கேட்டு வாங்கி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அழுக்குகளை அகற்றி, அவர் நினைவாக ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்து, அபிஷேகப்பொடி தூவி, கழுவி, பால் ஊற்றி சமனம் செய்து, விபூதி கொட்டி மணக்க வைத்து, நெய் விளக்குகள் ஏற்றி வைத்து, ஒரு வெண்கல விளக்கு ஒரு கண்ணாடி விளக்கு, பொருத்தி வைத்து ஐநூறு ரூபாய்ப் புடவை சார்த்தி, பூபோட்டு, தேவாரப்பதிகம், பாடியிருக்கிறேன்.

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே...

என்று கண்ணில் நீர் கசிய, இந்த இடம் நல்லபடி மிளிர வேண்டுமே என்று வருத்தப்பட்டிருக்கிறேன்.

கட்டிடக்கலைஞர் நண்பர் திரு. சுந்தர் பரத்வாஜரும், ஜோதிடர் K.P. வித்யாதரனோடும் ராஜராஜன் கால்பட்ட இடங்களெல்லாம் எவை என்று பல்வேறு முறைகள் பயணம் செய்திருக்கிறேன்.

உடையார்குடி என்ற காட்டுமன்னார் கோயிலிலும், குடந்தைக்கு அருகே இருக்கின்ற பழையாறை உடையாளூரிலும், சோழன்மேடு, சோழன் மாளிகை போன்ற இடங்களிலும் பகலும், இரவும் படுத்துக் கிடந்திருக்கிறேன். “பூச்சிப்புட்டு இருக்கும். இங்க என்னத்துக்கு கிடக்கறீங்க” என்று கிராம மக்கள் விரட்டினாலும், உள்ளுக்குள் ஏதோ ஒன்று ஸ்பூரிக்க வேண்டுமென்று கிடந்திருக்கிறேன்.

பெருவுடையார் கோயில் உள்ளுக்குள் இருக்கின்ற ஓவியங்களையும், சிற்பங்களையும், நாற்பது ஐம்பது முறைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

காரில் பயணப்பட்டால் தூரம் தெரியவில்லை என்று ஸ்கூட்டர் கடன் வாங்கி குதிரையில் பயணப்படுவது போல் தஞ்சையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு பயணப்பட்டிருக்கிறேன். குடந்தை, தஞ்சை பெருஞ்சாலையை பல இடங்களில் நடந்தே கடந்திருக்கிறேன்.

மிக உக்கிரமான நிசும்பசூதனி சிலையையும், சில காளி கோவில் சிலைகளையும் அருகே நின்று தொட்டுத் தடவிப் பார்த்திருக்கிறேன். அந்நேரங்களில் அந்தக் கோவில் சம்பந்தப்பட்டவர்களே கருவறைக்குள் அழைத்து நெருக்கமாய் நின்று தரிசனம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

பதினாறு வயதில் பெருவுடையார் கோவில் பார்க்கும் போது ‘இது ஏதோ அற்புதம்’ என்ற எண்ணம் மனதில் பதிந்தது. திரும்பத் திரும்ப பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. திரும்பத் திரும்பப் பார்த்தது கோயிலைப் பற்றிய விவரங்களை தெரிய வைத்தது. அப்படிப் படித்துத் தெரிந்து கொண்ட பிறகு உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் மீது ஈடுபாடு வந்தது. சோழ நாகரிகம் மொத்தமும் எனக்குத் தெரிய வந்தது. அந்தத் தனி மனிதனும், அவரைச் சுற்றியுள்ள நாகரிகமும், இந்தப் பெருவுடையார் கோவிலும் ஒன்று சேர்ந்து ஒரு கலவையாகி இதை எழுத வேண்டுமென்ற எண்ணம் முப்பத்திரண்டு வயதில் ஏற்பட்டது. முப்பத்தெட்டு வயதில் இதற்கான முயற்சிகளை நான் வேகமாகத் துவங்கினேன். இந்த அறுபது வயதில் எழுதி முடித்து விட்டேன்.

வாசகர்களுக்கு இவர்கள் உண்மையா, இது கற்பனையா என்று ஒரு புதினத்துக்குப் பிறகு கேள்விகள் வருவது இயற்கை. நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது விழுக்காடு இதிலுள்ள பெயர்கள் உண்மையானவை. பல சம்பவங்கள் உண்மையானவைகள். கல்வெட்டு ஆதாரமுள்ள சம்பவங்கள். என்னுடைய கற்பனையும் இதில் கலந்திருக்கிறது.

பஞ்சவன் மாதேவி எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. அவர் இறந்த விதம் என் கற்பனை. ஆனால் அவருக்காக பள்ளிப்படைக் கோயில் இராஜேந்திர சோழன் எழுப்பியது என்பது சரித்திரம்.

இராஜராஜ பாண்டிய ஆபத்துதவிகளான சேரதேசத்து நம்பூதிரிகள் தேடிக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது என் கற்பனை. ஆனால் மாதேவடிகள் ஸ்ரீ இராஜராஜ சோழர், மகள் என்பதும் அவர் நடுவிற் பெண்பிள்ளை என்பதும், அவர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கக்கூடும் என்பதும் சரித்திரம்.

பாறைகள் வெட்டப்பட்ட இடம், கொண்டுவரப்பட்ட விதம் யூகம்தான். வேறு எப்படியும் இது இருந்திருக்காது என்பதுதான் அந்த யூகத்தின் அடிப்படை. சாரப்பள்ளத்திலிருந்து சாரம் கட்டி இத்தனை உயரம் கல் சுற்றியிருக்கிறார்கள் என்பது சிறிதளவுகூட நம்ப முடியாத ஒரு செய்தி. தஞ்சையில் வாழும் திரு. இராஜேந்திரர் என்ற பொறியல் வல்லுனரின் கூற்றுப்படி இது ஸ்பைரல் சாரமாக, வளைந்து வளைந்து போகும் பாதையாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்பது ஒரு யூகம். அந்த மண் கொண்டுபோய் கொட்டப்பட்ட இடமும், ஒரு சிறு குன்றென அது நிற்கும் விதமும் இன்னமும் இருக்கின்றன.

அருண்மொழிபட்டனும், சீருடையாளும், சாவூர் பரஞ்சோதியும், வீணை ஆதிச்சனும், கோவிந்தனும் நிஜம். சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் பார்க்க விற்போர் நடந்தது நிஜம். கண்டன்காரியும், காரிக்குளிப்பாகையும் நிஜம். நித்த வினோதப் பெருந்தச்சன், குணவன் நிஜம். குஞ்சரமல்ல பெருஞ்தச்சர் நிஜம். ஆனால் உள் சாந்தாரத்திலுள்ள பரத நாட்டியச் சிற்பங்களுக்கு பஞ்சவன்மாதேவி தான் ஆதாரமாக இருந்தார் என்பது என் கற்பனை. நாவலுக்காகக் கொடுக்கப்பட்ட சுவை.

திருவாதிரை களியோடு தந்த கூட்டுக்கறியில் அவரை எத்தனை துவரை எத்தனை என்று எண்ணாது நன்கு ருசித்து உண்ணுங்கள். சோழதேசத்து மேன்மையும், தமிழர் நாகரிகமும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் உங்களுக்கு ஒரு கோடி காட்டுவதுதான் இந்தப் புதினத்தின் நோக்கம்.

இருநூற்று முப்பத்தேழு நாவல்கள் நான் எழுதியனுடைய அடிப்படைக் காரணமே இதை எழுதத்தான். மற்ற நாவல்கள் அத்தனையும் உடையார் எழுதுவதற்குண்டான பயிற்சி தான். ஏதேதோ செய்து, எங்கெங்கோ அலைந்து எதை எதையோ முக்கியம் என்று கருதி, சிதறி, சின்னாபின்னப்பட்டு பிறகு மறுபடியும் ஒன்று கூடி இப்படி ஆறு பாகத்திற்கு ஒரு புதினம் எழுத முடிந்திருக்கிறதென்றால் அது குருவருளன்றி வேறு என்ன.

என் குருநாதர் யோகி ராம்சுரத்குமார் என்னை நேசித்தார். யூ ஆர் மை பென் என்று சொன்னார். மறுபிறவி என்று ஒன்று இருந்தால் இந்தப் பிச்சைக்காரன் (யோகி ராம்சுரத்குமார்) பாலகுமாரனோடு இருக்க விரும்புகின்றான் என்று சொன்னார். அவர் மகாஞானி. எல்லாம் கடந்தவர். அவருக்குப் பிறவி உண்டா. என்னுள் இருக்கிறார். என்னை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த இயக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த உடையார். இந்த ஆறுபாகப் புதினம்.

சோழசாம்ராஜ்ஜியத்தின் மீது தன் ‘பொன்னியின் செல்வன்’ மூலம் என்னைக் காதல் கொள்ள வைத்த பேராசிரியர் கல்கி அவர்களுக்கு என் வணக்கத்தையும், நன்றியையும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

நாவல் எழுத உதவி செய்த என்னுடைய இலக்கிய தொல்பொருள் ஆராய்ச்சி நண்பர்களுக்கும், சோழ தேசத்துக் காதலர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இலக்கியம் படிக்க என்னை இடையறாது ஊக்கப்படுத்தி ‘பாலகுமாரன் நல்லவன். அவனால் பலருக்கு நல்லது நடக்கும்’ என்று வெகுநாட்களுக்கு முன்னே உறுதியளித்த, எனக்குத் தெம்பு கொடுத்த என் தாயார், தமிழ்ப் பண்டிதை தெய்வத் திரு. ப.சு.சுலோச்சனா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் தமிழ் அவர் போட்ட பிச்சை.

உடையார் எழுதி முடித்ததும் பொங்கிப் பொங்கி வந்த கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும், நேரே பார்க்கும் போது கட்டிக் கொண்டவர்களும் ‘எப்படித் இந்த மாதிரி ஒரு நாவல் எழுதினேள்’ என்று கண்கலங்கியவர்களும், ‘இந்த தடவை ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போப்போறதில்லை. இந்த சம்மர்ல தஞ்சாவூர் முழுக்க இராஜராஜனை தேடிண்டு போகப் போறோம். போகும்படியா பண்ணிட்டீங்க’ என்று சொன்னவர்களும், இம்மாதிரி பாண்டியர்கள் பத்தி எழுதமுடியாதா என்று ஆதங்கப்பட்டவர்களுக்கும், சோழர்கள் காலத்துல தமிழ் எப்படியிருந்தது என்று கேள்வி கேட்டவர்களுக்கும், ஒரு பக்கம் லெட்டர் எழுதறதுக்கு முடியலை என்னால. இத்தனை பக்கம் எழுதியிருக்கீங்கன்னா நீங்க மனுஷனா, இல்ல வேற ஏதாவதா எனக்குத் தெரியலை என்று வியந்தவர்களுக்கும், என் படைப்புக்கு மறைமுகமாகத் துணைபுரிந்த என் துணைவியர் கமலா, சாந்தா இருவருக்கும், ‘சூப்பர் நாவல்பா’ என்று சொன்ன மகள் ஸ்ரீகெளரிக்கும், அப்பா ஒருநாள் உட்கார்ந்து முழுக்க படிக்கணும், படிப்பேன் என்று வாக்குறுதி அளித்த மகன் சூர்யா என்கிற வேங்கடரமணனுக்கும், ‘நாவல்ல இந்த இடம் தப்பு வந்துடுச்சு. மாத்தணும்’ என்று சுட்டிக்காட்டி மாற்றுவதற்கு வழியைச் சொல்லி உதவி செய்த சம்பத்லஷ்மிக்கும், ஒலி நாடாவில் கதை சொல்வதை அங்கிருந்து ஆர்வமாகக் கேட்டு உற்சாகப்படுத்திய பாக்யலஷ்மி சேகருக்கும், இந்திரா பாஸ்கருக்கும், தஞ்சாவூருக்குத் தானே போறீங்க. நாங்களும் வரோம் என்று உடன் வந்து என் பித்து பிடித்த நிலையை பார்த்து ரசித்த அந்தத் தோழிகளுக்கும், சென்னையிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரிகளுக்கும், சேவர்களுக்கும், என் நண்பர் திரு. ராஜவேலுவுக்கும், அவர் அதிகாரி திரு.சத்யமூர்த்திக்கும், பல நேரங்களில் இந்த ஆறு பாகத்திலும் எனக்குப் பிழைதிருத்தம் செய்தும், தேவையான குறிப்புகளை எடுத்து வைத்தும், என்னோடு விவாதித்தும் என்னைச் சரியான கோணங்களில் பார்க்க வைத்ததுமான என் உடன்பிறந்த சகோதரி, சரித்திர ஆசிரியை சிந்தா ரவி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுகிறது.

ஆறு பாக நாவல் கண்டு அசராது, ‘சீக்கிரம் எழுதுங்கைய்யா’ என்று ஊக்கப்படுத்திய விசா பப்ளிகேஷன் ஸ்ரீ திருப்பதி அவர்களுக்கும், இந்த நாவல் தொடர்ந்து வெளிவர தன் பல்சுவை நாவல் மாதபத்திரிகையின் இடம் கொடுத்து பெருமிதப்பட்ட திரு. பொன்சந்திரசேகர் அவர்கட்கும், ‘இந்த நாவல் நிற்கக்கூடாது, முடிக்கப்பட வேண்டும் என்ன உதவி தேவையெனினும் நான் செய்கிறேன்’ என்று உற்சாகம் தந்த என் அருமை நண்பர் ஸ்ரீ எம்.ரவிச்சந்திரன், கோவை அவர்கட்கும், சிறப்பாக அட்டைப்பட வரைந்த ஓவியர் ஷ்யாம் அவர்கட்கும், என் கண்பார்வையில் ஒரு கோளாறு ஏற்பட, இனி எப்படிப்படிப்பேன், எவ்விதம் எழுதுவேன் என்று பயந்தபோது அக்குறையை நீக்கி அருளிய எங்கள் மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக் கண்ணி பெருமாட்டிக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

என் எழுத்து வேகத்திற்கு ஈடுகொடுத்து கேட்ட போதெல்லாம், சரித்திர[ புத்தகங்களை என் முன் பரப்பி இந்நாவலை ஒலி நாடாவிலிருந்து காகிதத்திற்கு மாற்றிய என் உதவியாளர் திரு. கிருஷ்ணமூர்த்திக்கு என் ஆசிகள்.

எந்த வியக்தியும் தனி மனிதனால் நடந்து விடுவதில்லை. ஒரு புல்கூட கூட்டு முயற்சியால் தான் முளைக்கிறது, மலர்கிறது. இப்புதினத்தை சோழ மக்களின் நாகரிகத்தை அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை பெருவுடையார் கோயில் கட்டிடக்கலைச் சிறப்பை கணித மேன்மையை, செல்வச் செழிப்பை வெளிக்கொணர்ந்த என் அரசர் சோழமாமன்னர் சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் அவர்கள் பாதங்களில் வைத்துப் பணிகிறேன்.

வாழ்க இராஜராஜத்தேவர்
வளர்க தமிழ் மொழி
சோழம் சோழம் சோழம்

என்றென்றும் அன்புடன்
பாலகுமாரன்

Saturday, June 27, 2009

பிள்ளைக் கறி கேட்ட கடவுள் நியாயமானவரா

ஐயா, குழந்தையை நரபலி கொடுத்து கடவுளை திருப்தி செய்யும் கதை ஒன்று அறுபத்து மூன்று நாயன்மார்கள் கதையில் இருக்கிறது. இது நியாயம்தானா. எந்தக் கடவுள் நரபலி கேட்டார். அதுவும் பெற்ற குழந்தையையே வெட்டிக்கொடு என்று சொல்வார். நான் இந்து மதத்தைச் சார்ந்தவனாயினும் இந்தக்கதை என்னை அதிகம் தொந்தரவு செய்கிறது. அதனால் கேட்கிறேன். தயவு செய்து விளக்குங்கள்.

உங்கள் அறியாமையில் விளைந்த கேள்வி அது. எந்த விஷயத்தையும் ஆழ்ந்து யோசிக்காமல் மேலோட்டமாக உங்கள் அபிப்ராயம் வைத்தே உலகத்தை எடைபோடுகின்ற சிறுமையில் விளைந்த விளைவு அது. மிகத் தெளிவான கருத்துகளை வாழ்வியலைப் பற்றிக் கொண்ட இந்து மதம் தன்னை வெளிப்படுத்தச் சொல்லும் கதைகளை மிகக் கவனமாக நெய்திருக்கிறது. வெகு குறிப்பாக அறுபத்து மூன்று நாயன்மார்கள் கதைகளும் மிகப்பெரிய வாழ்வியல் விளக்கம் நமக்கு அளிப்பவை. யோசிக்க யோசிக்க தெளிவாக்குபவை.

வெற்றி என்றும், தன் தேசத்து எதிரியை வீழ்த்துவது என்பதும், அடுத்தவரை வெட்டிக் கொன்றால்தான் சுகமாக இருக்க முடியும் என்றும், தான் சுகமாக இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்தினாலேயே அந்தக் கொலைகள் நியாயப்படுத்தப்பட்டன என்றும், தர்மத்தின் பாற்பட்டது என்றும் நாம் சொல்லிக் கொள்கிறோம். எனவே, உலகத்தின் நாகரீகமாக, உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இதுவே தர்மமாக இருக்கிறது. நாடு பிடிக்கக் கொலை செய்யலாம். அடுத்தவர் செல்வத்தை சூரையாட வெட்டிக் கொல்லலாம். குழு மனப்பான்மையோடு பரஸ்பரம் வெட்டி சிதைத்து இடையறாது கொலைகளை இந்தப்பூமி செய்து வந்திருக்கிறாது.

பரஞ்சோதி என்கிற அந்த தளபதி, மன்னனுக்காக பல போர்கள் செய்து, பல பேரைக் கொன்று குவித்து வெற்றி வாகை சூடி,இனி போதும் என்று கடவுள் பணிக்குத் திரும்புகிறார். ஆன்ம விசாரத்தில் ஈடுபடுகிறார். அவர் கடவுள் பணிக்குத் திரும்பியதாலேயே, ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டதாலேயே இதுவரை அவர் செய்துவந்தவை நியாயமாகி விடுமா? ஏகப்பட்ட அக்கிரமங்களைச் செய்துவிட்டு, உழவாரப்பணி என்று ஆரம்பித்து விட்டால் உத்தமராகி விடமுடியுமா?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

அந்தத் தளபதி மிகச் சிறந்த தளபதியாக இருப்பினும்,அவர் செய்த கொலைகள்,அவர் வாழ்க்கையில் கணக்கெடுத்துக் கொள்ளப்படும். எத்தனை பேரை வெட்டி வீழ்த்தியிருக்கிறார். அதற்காக, உன் தர்மத்திற்காக, உன் கொள்கைகளுக்காக, எத்தனை பேரை குத்திக் கொன்றிருக்கிறாய். ஏனெனில் அவர்களெல்லாம் உங்களுக்கு வேண்டாதவர்கள். அப்பொழுது வேண்டியவர்கள் யார். வேண்டியவர்களில் சிறந்தவர் யார், தாயா, தகப்பனா, மனைவியா அல்லது நீ பெற்ற குழந்தையா என்று ஒரு மனிதனைக் கேட்டால், தாய் தந்தையரையும் விட, மனைவியையும் விட, அவன் தன் குழந்தையைத் தான் தனக்கு மிகவும் நேசிப்புக்கு உகந்தவனாகக் கருதுகிறான்.

அப்படி நீ வெட்டிக் கொன்றவர்களெல்லாம் ஒரு காலகட்டத்தில் குழந்தைகள்தானே. அடித்துக் கொன்றவர்களெல்லாம் பல குழந்தைகளுக்கு தந்தையாய் இருந்தவர்கள் தானே. உறவாக வளர்ந்தவர்கள்தானே. அவர்களை எதிரியாக நினைத்துவிட்டு, உன் குழந்தையை உயிர் என்று கொஞ்சுகிறாயே. உன் குழந்தையை உன்னால் கொல்ல முடியுமா, வெட்டி எறிய முடியுமா, ஆயிரம் ஆயிரமாய் கொலைகள் செய்திருக்கிறாயே. உன் குழந்தையை நறுக்கி கறி செய்ய முடியுமா, உன்னுடைய புகழை, உன்னுடைய வீரத்தை தன்னுடையது என்று பங்கு போட்டுக் கொண்டாளே உன் மனைவி இதில் பங்கு போட்டுக் கொள்வாளா. முதலமைச்சரின் மனைவி என்று நெஞ்சு நிமிர்த்திக் கொண்டாளே. இப்போதும் செய்வாளா என்று கணவனுக்கும், மனைவிக்கும் இறைவன் சோதனை வைக்க, அந்தப் போர் வீரர் தன் மனைவியோடு தன்னைப் பற்றி முழுவதுமாக விசாரத்தில் ஈடுபட்டதால் தான் எதுவும் செய்யவில்லை. தான் வெறும் கருவி. செய்தது நான் இல்லை. நான் தளபதியும் அல்ல. சகலமும் இறைவனின் திருவுளத்தின்படி நடக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்டதால், ஒரு இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்ததால் அதை எந்தவித மனவேதனையுமின்றி செய்ய முடிந்தது.
அவர் மனைவியால் சமைக்க முடிந்தது. முந்திய வினைக்குக் கிடைத்த தண்டனை என்பதாய் அந்தத் தம்பதிகள் புரிந்து கொண்டார்கள்.

குழந்தையை வெட்டிக் கொல்வது துன்பம் என்று நீங்கள் கருதினீர்கள் என்றால் அந்தத் துன்பத்திற்கு முன்வினை ஒன்று இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனை ஒன்று ஏற்பட்டது என்றால், அந்தச் சோதனைக்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணத்தையும், காரியத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டு அவன் கட்டளைப்படி செய்யுங்கள் என்பது கருத்து. உண்மையான சிவத்தொண்டர்களும் சிவரூபமே என்பதும் இந்தக் கதையின் கருத்து.

Sunday, June 21, 2009

உடையார் - ஒரு முன்னுரை



நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக்கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்றன ஓரு நிலைமை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று.

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா, உண்மைதானா. நாவல் எழுதி முடிக்கப்படாது என்று சொன்னார்களே. இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளீயாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித் தருகிறேன்; அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுத முடியாது என்று என் பதிப்பாளரை பயமுறுத்தினார்கள்.

பந்தல் எரிந்த கும்பாபிஷேகத்தையும்,பதவி பறிக்கப்பட்ட தலைவர்களையும், பாதிக்கப்பட்ட அமைச்சர்களையும், சுட்டிக்காட்டினார்களே. எனக்கும் அதுதான் கதி என்று சொன்னார்களே. அவர்கள் என்ன ஆனார்கள். இந்த நாவலை நான் எப்படி முடித்தேன் என்று யோசிப்பு வந்தபோது மிகத்தீவிரமாய் என் குருநாதரைப் பற்றிய நினைப்பு எனக்குள் பீறிட்டு எழுந்தது.

என் சத்குருநாதன் கடவுளின் குழந்தை, அடியார்க்கு நல்லான், திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அவரிகளின் கருணையாலும் பரிபூரண ஆசியாலும் இந்தப் புதினத்தை ஆறாவது பாகம் வரை எழுதி முடித்துவிட்டேன்.

இந்தப் பிரம்மாண்டமான சரித்திரத்தை என் புத்திக்கு எட்டியவரை உணர்ந்து அனுபவித்து உள்வாங்கி மிகுந்த கவனத்தோடு, இழை இழையாய் நெய்து, பூக்கள் நிறைந்த சால்வையாய் அவர் காலடியில் சமர்ப்பிதம் செய்து விட்டேன். தை வெறும் சரித்திர நாவலாக மட்டும் கருதவில்லை. ஒரு இனத்தின் பண்பாட்டு வெளியீடாக, ஒரு நதிக்கரை நாகரிகத்தின் நிறைவான கதையாக, வரலாற்றைக் காட்டிலும் பிரம்மாண்டமான் சனாதன தர்மத்தின் ஒரு அலைவீச்சாக, தமிழ் பேசும் எம் குடிமக்கள் எத்தனை அற்புதமான விஞ்ஞானபூர்வமான, அறிவுபூர்வமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்ற விதமாகவும் எழுதியிருக்கிறேன்.

உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் என்கிற தனி மனிதர் தன்னைப் பற்றி மட்டுமே முன்னிலைப் படுத்திக் கொள்ளாது தன்னைச் சேர்ந்த அத்தனை மக்களைப் பற்றியும் அக்கறைப்பட்டு அவர்களையும் இந்த இறைப்பணியில் சேர்த்துக் கொண்டு ஒரு நாகரிகத்தை கல்வெட்டாக விட்டுச்சென்ற கனிவை எண்ணி, அதில் மனம் கரைந்து, அதில் வசப்பட்டு, கதைக்கு நடுவே அந்தக் கனிவை காட்டவும், நான் முயற்சித்திருக்கிறேன்.

சரித்திரக் கதையாக இருப்பினும் போர் பற்றிய விமர்சனமும், பெண்கள் பற்றிய பார்வையும் ஒரு பொழுதுபோக்கு பற்றிய குறிப்புகளும், கடவுள் பற்றிய சிந்தனையும், அது குறித்த தத்துவமும் விவாதமும் என்றைக்கும் எப்போதும், எவரும் புரிந்து கொண்டு மேற்கொண்டு சிந்திக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இதில் புகுத்தியிருக்கிறேன்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் வாழ்வினுடைய அடிப்படைத் தாகங்கள் அகன்று விடவில்லை. மனிதர்கள் இப்போதும், எப்போதும் ஓரே விதமாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

இந்த நாவலை சோழதேசம் நோக்கி பயணப்படுகையில் நான் முடிக்க நேர்ந்தது. ஒரு குவாலிஸ் வண்டியில் நண்பர்கள் அமர்ந்திருக்க தாம்பரத்தில் கதை துவங்கி இடையாறது இடையாறது ஒலி நாடாவில் பதிவு செய்து கொண்டு வந்தேன். ஒரு கனத்த மழை போல தங்கு தடையின்றி இந்த நாவல் என்னிலிருந்து மிகச்சீராக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பயணப்பட்டுக்கொண்டே நாவல் சொல்வதால் அதன் அடர்த்தியும், வேகமும், தெளிவும், அழகும் குறையவே இல்லை. உடன் வந்த என் நண்பர்கள் வியந்துபோனார்கள். அங்கங்கே நான் உணர்ச்சிவசப்பட என் தலையைத் தடவி, பிடரியை வருடி, தோளைத்தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.

சோழதேசத்தின் எல்லையைத் தொடும்போது உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் இறைவனடி சேர்ந்தார் என்று சொல்லி முடித்துவிட்டு ஓலிநாடாவை பக்கத்தில் வைத்துவிட்டு வெளியே பார்த்து அழத்துவங்கினேன். இன்னும் என்னுள் அந்த நேரம் அந்த நினைப்பு பசுமையாக இருக்கிறது. அருகே ஒருவர் இறந்துவிட்டதுபோல, அவர் இறந்த செய்தி ஐந்து நிமிடத்திற்க்கு முன்புதான் எனக்கு தெரிவிக்கப்பட்டதுபோல, துக்கத்தோடு நான் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்த அந்த மன்னனுக்காக கிட்டதட்ட கதறலாக அழுதேன். அப்பொழுது அப்படி உணர்ச்சி வசப்பட்டது நியாயமாகத்தான்படுகிறது. அந்த அழுகை சரி என்றுதான் தோன்றுகிறது.

வெறும் புத்தியால் மட்டும் ஒரு புதினத்தை எழுதிவிட முடியாது. ஒரு கல்வெட்டைப் பார்த்து விட்டு அதுபற்றிய தகவல் சொல்வது போல் ஒரு கட்டுரையாய் ஒரு புதினம் எழுதப்படக்கூடாது. விமானம் இத்தனை உயரம், இத்தனை அகலம், இத்தனை வருடங்கள் முன்பு கட்டப்பட்டது. இதன் கற்களின் எடை இத்தனை. பிளந்த கற்கள் இவ்வளவு. பிளக்காத கற்கள் இவ்வளவு. உயரே இருக்கின்ற கலசத்தின் எடை இவ்வளவு. சுற்றியுள்ள மதில்சுவரின் அளவு எத்தகையது. ‘இவர்தான் மூலவர் எல்லாரும் சாமி கும்பிட்டுக்கோங்க, சீக்கிரம் வெளியே வாங்க’ என்று ஒரு வழிகாட்டியைப் போல ஒரு எழுத்தாளன் செயல்படமுடியாது.

அந்தக் கட்டிடத்திற்கு அருகே போய் அண்ணாந்து பார்த்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இதை எப்படிக் கட்டினார்கள். அவர்களெல்லாம் யார். என்ன கணக்கு, என்ன கருவி என்று எவர் வியக்கிறாரோ. நம்முடைய முன்னோர் எத்தனை நேர்த்தியாக இதைச் செய்திருக்கிறார்கள் என்று எவர் பெருமிதப்படிகிறாரோ, இதைச் செய்கின்ற ஆற்றல் இருக்குமென்றால் அவர்களுக்கு இன்னும் என்னென்ன ஆற்றல் இருந்திருக்க வேண்டும். அந்த ஆற்றல் உள்ளவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். அவர்கள் எவ்விதமாக குடித்தனம் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து யோசிக்கிறார்களோ அப்படி உணர்ச்சிவசப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வமாக எழுதப்பட்டது இந்த நாவல்.



............................தொடரும்

குரு என்பவர் ஒருவருக்கு அவசியமா ?

ஐயா, குரு என்பவர் ஒருவருக்கு அவசியமா ?

பாலகுமாரன்: உலகில் ஒவ்வொரு உயிரினமும் தன் வாழ்க்கைப் பற்றிய அறிவை தன் சக உயிரினங்களிடமிருந்து தான் பெறுகின்றது. உடை உடுத்தலை, உண்ணுதலை, உறங்குதலை, கூடிப்புணர்தலை, இயற்கை உந்துதல் கொடுத்தாலும் அது சக உயிரினங்கள் சொல்லிக் கொடுக்க, அந்த அனுபவத்தை கிரஹித்துக் கொண்டு இன்னும் சீராக வாழ்கிறது. இந்த சீரான வாழ்க்கைக்கு நாகரீகம் என்று பெயர்.

எல்லா செயல்களையும் நீங்கள் பிறரிடமிருந்து கற்றுக் கொள்கிறீர்களே அன்றி எதையும் நீங்களாக அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்டதை நேர்த்தியாக செய்கிறீர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், வாழ்வின் அறிவு என்பது சக உயிரினமிடத்திருந்தே வருகிறது. தலை வாருதலிலிருந்து காலணி அணிவது வரை மற்றவர்கள் சொல்லி தந்துதான் அறிந்து கொள்கிறீர்கள் என்கிற போது வாழ்வின் ஆதாரமாக உள்ள ஆத்ம தாகத்தை, உயிரின் தவிப்பை, தன் இருப்பை அறிவது என்பதை எவரும் அறியாமல் நீங்களாக உணர்ந்து கொள்ள முடியுமா? இதை நானாக தெரிந்து கொள்வேன் என்று இறுமாந்து திரிவது நல்லதா. கடவுள் அறிதல் அல்லது தன்னை அறிதல் என்கிற விஷயத்திற்கு வெகு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார். அந்த வழிகாட்டிக்கு குரு என்று பெயர்.

குரு என்பவர் சாக்கு போக்குக்காக உங்களை சில மந்திர ஜபங்கள் செய்யச் சொல்லி, பூஜைகள் செய்யச் சொல்லி மெல்ல மெல்ல பிரம்ம ரகசியத்தை உபதேசிப்பார் என்று சொல்லப்படுகின்றது. கடவுள் தேடுதல் எதற்காக என்ற கேள்வி எழவில்லையெனில் வாழ்வு பூரணமாகவில்லை என்று அர்த்தம். வாழ்வினுடைய தினசரி விஷயங்களில் அலுப்பு ஏற்பட்டு இது என்ன வாழ்க்கை என்ற கேள்வி எழுகிற போது கடவுளைப் பற்றிய தாபம் அல்லது தன்னை அறிதலைப் பற்றிய ஏக்கம் எழுகிறது. அப்பொழுது வெகு நிச்சயம் குரு என்பவர் தேவை.


அந்த குரு தன்னை அறிந்தவராக இருக்கிறபொழுது உங்களுடைய தவிப்பை முற்றிலுமாய் உணர்ந்து உங்களை அறியாமல் உங்களை உங்களுக்குள் தள்ளுகின்ற ஆற்றலையும் பெற்றிருப்பார். அந்த ஆற்றல் மிக ரகசியமாய் உங்களில் பாய்ந்து உங்களுக்குள் உங்களை அறிவிக்கும். இது விஞ்ஞான பாடமல்ல. அடிப்படையாய் புரிந்து கொள்வதற்கும், பேசி தெரிந்துகொள்வதற்கும். தடித்த புத்தகங்களிலிருந்து கற்று கொள்வதற்குண்டான விஷயமுமல்ல. இது ரகசியமானது. ரகசியம் என்பதற்கு வேறு ஒருவருக்கு சொல்லக்கூடாது என்ற அர்த்தமில்லை. எப்படி உள்ளே வந்தது என்றே தெரியாத ரகசியம் இது. நீங்கள் எப்படி மாறினீர்கள் என்றே தெரியாத ரகசியம் இது. உங்களை அறியாது உங்களை மாற்றுவது என்பது தன்னை அறிந்த குருவால் வெகு நிச்சயம் இயலும்.
எனக்கும், கடவுளுக்கும் இடையே இன்னொருவர் எதற்கு என்று கேள்வி வருவது மிகப் பெரிய அறியாமை. தான் எல்லாம் அறிந்துவிட்டோம், தன்னால் சகலமும் அறியமுடியும் என்கிற அறியாமை. உங்களுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தவரையே குரு என்று கொண்டாடிக் கொண்டிருக்கிற பொழுது கடவுள் தேடலை தானாக அறிந்து கொள்வேன் என்று கொக்கரிப்பது எவ்வளவு பெரிய பேதமை. உங்களை அறிவது தான் சரியான அறிவு. ஆனால் தன்னுள் தான் மூழ்குவது என்பது மிக மிக கடிமனான விஷயம்.

குரு என்பவரால் மட்டுமே உங்களை உங்களுக்குள் தள்ள முடியும். தங்களை அறிய வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு குருவினுடைய தேடலும் கூடவே வரும். அவருக்கு குரு அவசியமா என்ற கேள்வியே இருக்காது. குரு எங்கே என்கிற ஆவல்தான் இருக்கும்.

யார் குரு. நான் தான் குரு என்று சொல்லிக் கொள்கிறவர்கள் உங்களுக்கு குரு அல்ல. தன்னை உணர்தலே கடவுள் உணர்தல் என்கிற மகாவாக்கியம் உணர்ந்தவரே குரு. அவர் தன்னை உணர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வதே இல்லை. கடவுள் தெரிந்துவிட்டது என்று குதிப்பதும் இல்லை. மாறாய் அவர் வாழ்க்கை முற்றிலும் மற்ற மனிதர்கள் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டிருக்கிறது. வாழ்வின் அநித்தியம், வாழ்வின் அபத்தம் புரிந்தபோது உள்ளுக்குளிலிருந்து ஒரு கருணை வெள்ளம் புறப்பட்டு சகலரையும் அணைத்து கொள்கிறது. யாரை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இழந்து தொலைப்போம் என்கிற பரிதவிப்பு இருப்பின் யாரை வெறுக்க முடியும். எவரும் இங்கே நிரந்தரமில்லை என்கிறது மிக தெளிவாக வந்து விட்டால் எவரை வெறுக்க முடியும் எனவே எவரையும் வெறுக்காத கருணை மழை தான் குரு. கருணை உள்ளவர் முகத்தில் அற்புதமான தேஜஸ் இருக்கும். அவர் ஒவ்வொரு அசைவும் அன்பை பொழியும். கடவுள் ரூபமாகவே இருக்கும். அந்த குரு உபன்னியாசம் செய்கிறவர் அல்ல. மிக பெரிய பிரசங்கங்கள் நிகழ்த்துவதை காட்டிலும் தனித்தனியே ஒவ்வொரு மனிதரின் உள்ளுக்குள் இருக்கின்ற ஆன்மாவைத் தொட்டு உசுப்பிவிடுவது தான் குருவின் வேலை. எவரைப் பார்த்ததும் உள்ளுக்குள் பெரிதாய் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு அவரை உங்களை அறியாமல் வணங்கத் தோன்றுகிறதோ அவரை பின்பற்றத் தோன்றுகிறதோ, அவரை கொண்டாட ஆசை எழுகிறதோ, அவரை உங்கள் குரு என்று கொள்ளலாம்.

இங்கே ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். மக்களுடைய யோக்கியதைக்கு ஏற்ப அரசாங்கம் அமைவது போல, கலை இலக்கியம் இருப்பது போல, உங்களின் யோக்கியதைக்கு ஏற்ப உங்களுக்கு குரு கிடைப்பார். உங்களுக்குக் காசுதான் வாழ்வின் பிரதானம் என்றால் உங்களுக்கு காசு தருகின்ற குரு கிடைப்பார். உங்களுக்கு சுகபோகம்தான் பிரதானம் எனில் சுகபோகம் தருகின்ற குரு கிடைப்பார். உங்களுக்கு கடவுள் தேடுதல்தான் பிரதானம் எனில் கடவுளை அறிந்த குரு கிடைப்பார். உங்கள் யோக்கியதைக்கு ஏற்ப குரு கிடைத்த பிறகு தான் உங்களை பற்றியே உங்களுக்கு தெரியவரும். குருவை எங்கே தேடுவது. கடைகளில் குரு தொங்கிக் கிடக்க மாட்டார். குரு இன்னவிதமாக இருப்பார் என்று எவராலும் சொல்லமுடியாது.

ஒரு ஜப்பானிய கேள்வி-பதில் ஒன்று உண்டு. சாலையில் நீ நடக்கும் போது புத்தர் உனக்கு எதிரே நடந்து வந்தால் நீ என்ன செய்வாய் என்று கேள்வி உண்டு. இந்த கேள்விக்கு பதில் சொல்லும்படி பணிப்பார்கள். விழுந்து வணங்குவேன், சுற்றி வந்து கொண்டாடுவேன், என் வீட்டிற்கு அழைத்துப் போவேன், உபசரிப்பேன், எல்லோரையும் கூட்டிக் கொண்டுபோய் புத்தரை அறிமுகப்படுத்துவேன் என்றெல்லாம் பதில்கள் உண்டு. ஆனால், அவை உண்மையான பதில்கள் அல்ல. புத்தர் எப்படி இருப்பார் என்று யாருக்குத் தெரியும். ஏதோ ஒவியத்தைப் பார்த்து, சித்திரத்தைப் பார்த்து புத்தர் இப்படித் தான் இருப்பார் என்று நாம் நினைத்து கொள்கிறோம். புத்தர் என்ன விதமாக இருந்தார் என்று யாருக்கும் தெரியாது, உங்கள் முன் என்னவிதமாக தோன்றுவார் என்பதும் தெரியாது.

புத்தரைத் தேட வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டால் எதிர்ப்படுகின்ற ஒவ்வொருவரையும் இவர் புத்தரா? அவர் புத்தரா? இது புத்தரா? அது புத்தரா என்று தேடுவது போல நீங்கள் குருவை தேட வேண்டும். எல்லா இடத்திலும், எப்பொழுதும் இடையறாது, இடையறாது தேட வேண்டும்.உங்கள் தேடல் உக்கிரமடைந்தால், ஒருமுகப்பட்டால் குரு உங்களை நேரே வந்து சந்திப்பார். அவராகவே வந்து உங்களை தொட்டு உலுக்குவார். என்னைத் தானே தேடிக் கொண்டிருக்கிறாய். இதோ என்று எதிரே வந்து நிற்பார் என்று சொல்லப்படுகின்றது.

குருவை ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட ரூபத்தில், ஒரு குறிப்பிட்ட அடையாளத்தில் கண்டுகொள்ள முடியாது. குரு மனிதராகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. பெரும் வானம் சிலருக்கு குருவாக அமைந்திருக்கிறது. காற்றின் இரைச்சல் குருவாக அமைந்திருக்கிறது. குரு தேடுதல் என்பது மனம் ஒருமுகப்பட்ட ஒரு உணர்வு. அந்த உணர்வு நிச்சயம் தேடுபவருக்கு குருவை கொண்டு வந்து கொடுக்கும்.

Thursday, June 18, 2009

தர்மம் வெல்லுமா ? - பாலகுமாரன் பேசுகிறார்.

ஐயா, வாழ்க்கையில் வெற்றி பெற சூழ்ச்சி மிக முக்கியமா.. சூழ்ச்சியில்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாதா.. நான் நல்லவன், தர்மம் தலை காக்கும் என்றிருந்தால் அது இழிவான விஷயமா..

பாலகுமாரன் : இது முழுக்க முழுக்க ஒவ்வொரு தனி மனிதனின் ஆற்றலைப் பொறுத்த விஷயம். வலி தாங்கும் திறன், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கொக்கரிக்கும் திறன் போன்ற பல திமிர்களை உள்ளடக்கியது.

சூழ்ச்சி இருந்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பது இன்று நேற்றல்ல.. சகுனியின் காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் வாக்கியம். இல்லை என்று சகுனியின் காலத்திலேயே தரும புத்திரரால் மறுக்கப்பட்டும் வந்தது.
“தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்” என்பது பாரதியின் வரிகள். அதாவது சூது, சூழ்ச்சி என்பவை தற்காலிகமாக ஒரு வெற்றியின் தோற்றத்தை தரக்கூடியவை என்பது தான் இதற்குப் பொருள். புளகாங்கிதம் அடைந்து சூழ்ச்சியினால் ஜெயித்து விடலாம் என்று சிலர் மார் தட்டலாம். அடி வாங்கி உருளும் போது அவர் வார்த்தைகள் வேறு விதமாகவும் இருக்கலாம். அல்லது நான் மறுபடியும் சூழ்ச்சி செய்து வெற்றி பெறுவேன் என்று பாதிக்கப்பட்டவரே மார் தட்டவும் செய்யலாம். அதனால் தான் சொல்கிறேன். இது தனிப்பட்ட மனிதனுடைய உரம் பொறுத்த விஷயம்.

அவமானம் தாங்கும் சக்தியைப் பொறுத்த விஷயம். அவமானத்திற்கு துடித்துப் போகிறவர்கள் சூழ்ச்சியில் இறங்க முடியாது, அவமானத்திற்கு துடிப்பதும், துடிக்காததும் இளம் வயதில் நீங்கள் வளர்க்கப்படுவதைப் பொறுத்தது. இளம் வயதிலேயே மானப்பிரச்சனைகள் ஏற்பட்டு அடிதடிக்கு அஞ்சாமல் இறங்கி அங்கேயே உரம் பெற்றால் தான் சூழ்ச்சி செய்கின்ற அல்லது சூழ்ச்சியை தேடிக் கண்டு பிடிக்கின்ற ஒரு மனோபாவம் வரும். சிறு வயதில் பொத்தி வளர்க்கப்பட்டு கிடைக்க வேண்டியவை கிடைத்து வெகுளியாக வளர்ந்தவருக்கு சூழ்ச்சி செய்ய முடியாது. சூழ்ச்சியை எதிர் கொள்ளவும் முடியாது.

இதற்கு அடுத்தபடியாக இடம் பெறுவது ஆசை. ஆசை என்பது பேராசையாகி விஸ்வருபம் எடுத்து உங்களைக் காட்டிலும் பிரம்மாண்டமாக வளர்ந்து, என்ன செய்தாவது வெற்றி அடைந்தாக வேண்டுமென்ற வெறி ஏற்படும். அது சூழ்ச்சி செய்யும். சூழ்ச்சிகளை முறியடிக்கும். கத்திக்கு கத்தி, வெட்டுக்கு வெட்டு, களவுக்கு களவு என்று களமிறங்கும். ஆசை எப்போது பேராசையாகும், சிறுசிறு வெற்றிகள் கிடைப்பதின் மூலம் ஆரம்ப நாட்களில் கிடைக்கும் விருதுகளின் மூலம் மிகப்பெரிய ஆசை வளரும். அது மட்டுமல்லாது சுற்றியுள்ள ஒரு தோழர் வட்டம் உங்களை உசுப்பேற்றி உலுக்கி உயரக்கொண்டு போய் வைத்துவிடும்.

நீங்கள் கார் விட்டு கீழே இறங்குகிற போது, ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று உங்கள் காரைச் சுற்றிக் கொண்டு நூறு பேர் உரக்கக் கத்தினால் கிறுகிறுப்பு வரத்தான் செய்யும். மண்டையிலுள்ள கர்வச் செதில்கள் வளர்ந்து விஸ்வரூபமாகும். கொம்புகள் முளைக்கும், சந்தேகமின்றி ‘நான் வருங்கால தமிழக முதல்வர் தான்’ என்று உங்களுக்கேத் தோன்றும்.

வருங்கால முதல்வர் என்று யாரைச் சொல்வார்கள். கொஞ்சம் காசு இருக்கிறவரை, கொஞ்சம் கூட்டம் சுற்றுகிறவரை ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று கூட்டம் கூடி சொல்வார்கள். அப்படி யாரையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள், சினிமா டைரக்டரை, நடிகரை, கவிஞரை, ஒரு ஜோசியரைக் கூட ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

யார் சொல்கிறார்கள், இதே போல சூழ்ச்சித்திறன் பெற்றவர்கள் தான் சொல்கிறார்கள்.“அண்ணா,நீங்க முதல்வர்னா பொதுப்பணித்துறையை எங்ககிட்ட விட்ருங்கண்ணா”. “ஏண்டா...ஏன் பொதுப்பணித்துறையை கேட்கற..”. “அதுலதாண்ணா சம்பாதிக்கலாம். உங்களுக்காக நான் நிறைய செலவு பண்ணிட்டேண்ணா. அதை எடுக்க வேணாமாண்ணா”
தம்பி சிரித்துச் சொல்ல, அண்ணனும் உரத்துச் சிரிக்க, அந்தச் சபையில் ஆனந்தப் பரவசம் கூத்தாடும். ஒருவர் தோளை ஒருவர் பற்றிக் கொண்டு மேலே வந்துவிடலாம் என்ற பேராவல் எழும்பும்.

“அவன் நமக்கு வேணும்ப்பா, கட் பண்ற நேரத்துல கட் பண்ணி விட்டுவிடலாம். நீ கவலைப்படாதே...” என்று ஒருவனை மற்றவனுக்கு எதிரியாக நியமித்து இடையறாது.. இடையறாது தந்திரம் செய்வார்கள்.
அவர் தேவரு.. இவர் வன்னியரு.. அந்த ஏரியாவோ தேவரு ஏரியா, நான் யாரை பிரசிடெண்ட் ஆக்குவேன். உங்களுக்குத் தெரியாதா, இல்லைன்னா இவராண்ட துட்டு இருக்கு, துட்டு என்னப்பா துட்டு, துட்டு எப்போ வேணாலும் சம்பாதிச்சுக்கலாம், ஆளுங்க சம்பாதிக்கறது தான் கஷ்டம். இப்போதைக்கு நமக்குத் தேவை ஆள் படை, படைபலம். படைபலம் இருந்து பதவி கிடைச்சிடிச்சுன்னா துட்டை காலுக்குக் கீழ் கொட்டுவாங்க. அப்படியே மணல் ஒதுக்கறா மாதிரி காலாலயே துட்டு ஒதுக்கி எடுத்துட்டுப் போயிடலாம்”

கலையிலிருந்து அரசியலா அல்லது அரசியலே கலையா. இடையறாது நிமிடத்திற்கு நிமிடம் குணம் மாறும். சூழ்ச்சி வெற்றியை நோக்கி விறையும். அந்த சமுத்திரத்தில் இறங்கி நீந்தி நெஞ்சாழம் போய்விட்டால் போதும், பிறகு கரைக்கு மீளுவது கடினம். உங்களைத் தாண்டிப்போன அலைகள் திரும்ப வந்து உங்களை உள்ளுக்குள் தள்ளிக் கொண்டிருக்குமே தவிர, வெளியே சேர்க்காது.

சமுத்திரம் உங்களை எப்போது கரை சேர்க்கும் தெரியுமா, நீங்கள் செத்த பிறகு. செத்து மிதந்த பிறகு தான் உங்களை கரையில் ஓதுக்கும். அதனோடு இருந்து கைகால் அசைக்க அசைக்க நடு சமுத்திரத்திற்கு இழுத்துப் போகப்படுவீர்கள். சூழ்ச்சி வெகு நிச்சயம் வெற்றி தரும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் எதற்காக சூழ்ச்சி? வெற்றி பெற, எதற்காக வெற்றி. அதுவொரு சந்தோஷம். ஆனால், வெற்றி பெற்ற பிறகு சந்தோஷமாய் இருக்க இயலுமா, நிம்மதியாய் சாப்பிட முடியுமா, அமைதியாய் தூங்க முடியுமா, நலமாய் புணர முடியுமா, யாரைக் கண்டாலும் கனிந்து கைகூப்ப முடியுமா, முடியாது. பெற்ற தாய் மீது சந்தேகம் வரும், மனைவியை வெறுக்கத் தோன்றும். மகனை ஆள் விட்டு கண்காணிக்கத் தோன்றும், பெண்களை விலைக்கு வாங்கத் தோன்றும். சூழ்ச்சி என்று ஆரம்பித்துவிட்டால் எல்லைகள் உண்டா, எல்லா நாகரிகமும் உடைத்து நாசமாக்கி, சூழ்ச்சி மட்டுமே சூழ்ந்து நிற்கும்.

பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே சாவான் என்பது வேதவாக்கு. சூழ்ச்சியை எடுத்தவன் சூழ்ச்சியாலேயே மரணமடைவான் என்பதைத் தான் அந்த வாக்கியம் சொல்கிறது. இதில் மோசமானது என்ன தெரியுமா, சூழ்ச்சியில் ஜெயித்து வெற்றிக் கொடி நாட்டி ஊர் வலம் வந்து பிறகு சூழ்ச்சியால் தாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு அடிபட்டு துவண்டு கீழே சரிந்து விழுந்த பிறகு ஊரும், உற்றாரும் பழிக்க வெற்றி பெற்ற நாட்களில் எப்படியெல்லாம் சிலிர்த்துக்கொண்டோம் என்று நினைத்து நினைத்து வெட்கப்பட்டு குலைந்து இறுதி நேரத்திற்காக காத்திருக்கிற நிலைதான் கொடுமையானது. அப்போதும் சூழ்ச்சி எண்ணம் தோன்றும், அது இன்னமும் கொடுமையானது.


சூழ்ச்சி ஓரு போதையான விஷயம். ஒருமுறை செய்து பழக்கப்பட்டு விட்டால் பிறகு திரும்ப திரும்ப செய்யத்தான் தோன்றும். சூழ்ச்சி வேண்டாம். தர்மம் தலைகாக்கும் என்று பலநூறு கதைகள் நம்மிடையே புழங்கி வருகின்றது. ஆனாலும் சூழ்ச்சி தான் உத்தமம் என்று சொல்லி வருபவர்கள் இன்னும் இருக்கத் தான் செய்வார்கள்.

Thursday, June 4, 2009

பொன்னூஞ்சல் – எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி – பாகம் -3

கிருஷ்ணதுளசி :இப்பொழுது உங்களை ஐ யா என்றும் குரு என்றும் அழைக்கிறார்களே. இது புது டிரண்டாக இருக்கிறதே. இந்த டிரண்ட் உங்களுக்கு உவப்புத்தானா?

பாலகுமாரன்: எனக்கு மறுப்பேதும் இல்லை. என்னை ஐ யா என்று அழைத்தாலும், பாலகுமாரா என்று அழைத்தாலும் ஒன்றே. என்னுடைய மூப்பின் காரணமாக என்னை ஐ யா என்று அழைக்கிறார்கள். என்னுடைய விஷய கன த்தின் காரணமாக, அதைப் புரிந்து கொண்டு வியப்பவர்கள் குரு என்று கூப்பிடுகிறார்கள். என்னை நன்கு அறிந்த சிலர் எனக்குள் சின்ன சின்னதாக இருக்கும் சில சிறப்புகளையும் கண்டுபிடித்து வியந்து போய் குரு என்று நமஸ்கரிக்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் வழிக்காட்டியாக, கைவிளக்காக, வெளிச்சமாக நான் அவர்களுக்கு இருந்திருப்பதை நன்றியோடு உணர்ந்து குரு என்று சொல்பவர்களும் உண்டு. எப்படி அழைத்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. இதில் நான் உச்சிக் குளிர்ந்து நிலைத் தடுமாறவும் இல்லை. நான் எங்கேயிருக்கிறேன், என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் என்ற தெளிவு எனக்கு பலமாக இருக்கிறது.

கிருஷ்ணதுளசி :எழுதுவதை ஏன் குறைத்து விட்டீர்கள்?

பாலகுமாரன்:
ஒரு ஓய்வு போலவும் ஒரு இடைவெளி வேண்டும் என்ற நினைப்பாலும் நான் எழுதுவதை குறைத்துக் கொண்டிருக்கிறேன். நான் வெறும் அரட்டைக்காரன் அல்ல . நான் உழைப்பதற்கு அஞ்சியதே இல்லை. நான்கு மணி நேரத் தூக்கம். வாரத்தில் ஏழு நாளும் வேலை என்று இடையறாது உழைத்துக் கொண்டிருந்தவன் நான். இருதய அறுவை சிகிச்சைக்கு பிறகும் இருபத்தியேழு நாட்களில் எழுந்து உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்து விட்டேன். மிக உற்சாகமாக வேலை செய்வதும், வேலையின் மீது காதலோடு இருப்பதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

‘உடையார்’ என்ற என்னுடைய மிகப் பெரிய கள மான அந்த நாவலை எழுதி முடித்து விட்டு அது கொடுத்த அயர்ச்சியில் சற்று அமைதியாக இருக்கிறேன். ஆனாலும் மரண த்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கையைப் பற்றியும், இ ராஜேந்திர சோழனைப் பற்றியும் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆன்மீக அனுபவங்களை ஒன்று சேர்த்து ‘காதலாகிக் கனிந்து’ என்ற ஒரு புத்தகம் வந்திருக்கிறது. மகான் ராகவேந்திரர் பற்றி ‘பிருந்தாவனம்’ என்ற பெயரில் இன்னொரு புத்தகம் வெளி வ ந்திருக்கிறது. நான் தொடர்ந்து எழுதுவேன். எழுதிக் குவிக்கின்ற எண்ணம் மட்டுப்பட்டிருக்கிறது. உடல் நலமும் அதற்கு காரணம். நோய் என்று ஏதும் இல்லை. ஆனாலும் குறைந்தப்பட்சம் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியமாக இருக்கிறது. உடம்பு தூக்கம் வேண்டும் என்று கேட்கிறது. அதனால் உடம்போடு இயைந்து ஒத்துழைத்து அதன் சொல் கேட்டு அதற்கு ஏற்றபடி என் வேலை நேரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

தொழிற்சாலை இயங்கி கொண்டிருக்கிறது. கொஞ்சம் உற்பத்திக் குறைவு அவ்வளவே.


கிருஷ்ணதுளசி :மீண்டும் குதிரை கவிதைகள் எழுதியிருக்கிறீர்களே. இன்னும் பல குதிரை கவிதைகள் வருமா?

பாலகுமாரன்: ஒரு எழுத்தாளனிடமிருந்து என்ன வரும், எப்பொழுது வரும் என்று சொல்லமுடியாது. அந்த எழுத்தாளனால் கூட யூகிக்க முடியாது. இன்னும் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனாலும் என்ன வரும் என்று சத்தியமாக சொல்ல முடியவில்லை. குதிரை கவிதைகள் மட்டுமல்ல அடி ஆழ்த்தில் இருக்கின்ற கடவுள் தேடலை கவிதை ஆக்குகின்ற ஒரு எண்ணம் இருக்கிறது. நான் உணர்ந்த, கன த்த, இருண்ட, அடர்த்தியான ஒரு தனிமையை கவிதை ஆக்க முயற்சிக்கவும் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இது தமிழுக்கு புதிதாக இருக்கக் கூடும்.


கிருஷ்ணதுளசி :உங்களுக்கு பெண் வாசகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்களே இது உண்மையா?

பாலகுமாரன்: அப்படி ஒரு சர்வே இங்கு யாரும் எடுத்தாக தெரியவில்லை. நானும் எடுக்கவில்லை. வாசகரை ஆண் என்றும் பெண் என்றும் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உவப்பில்லை. ஆணாயினும் சரி ,பெண்ணாயினும் சரி சந்திக்க நேர்ந்தால் அந்த வாசகரோடு அவரைப் பற்றிய விஷயங்களை கிரஹித்துக் கொள்வது என் வழக்கம். அவரைப் படிக்கத் தூண்டுவதும் என் இயல்பு. என்ன படித்திருக்கிறார், எப்படி படித்திருக்கிறார் என்று பார்ப்பது என் பழக்கம். பெண் வாசகர்கள் தான் அதிகம் என்று எவரேனும் ஒரு பட்டியலிட்டால் என க்கு அதில் ஆட்சேபணையும் இல்லை. ஒரு எழுத்தாளருக்கு பெண் வாசகர்கள் அதிகமாக இருப்பதில் யாருக்கு வருத்தம் இருக்க முடியும்.


கிருஷ்ணதுளசி :உங்களை சந்திக்கும் வாசகர்களிடம் நீங்கள் என்ன பேசுவீர்கள்?

பாலகுமாரன்: வாசகரிடம் இலக்கியம் தான் பேச வேண்டும் என்று நான் எந்தக் கட்டுபாடும் விதித்துக் கொள்ளவில்லை. அந்த வாசகரின் தொழில் பற்றியும், அந்த தொழிலில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் பற்றியும், அவர் குடும்பம் பற்றியும், குடும்பத்தினுடைய மேன்மைப் பற்றியும், அதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் நான் பேசுவது உண்டு. அவையும் இலக்கியம் தான் என்பது என் அபிப்ராயம்.