Monday, September 27, 2010

பாலகுமாரனின் ஸ்ரீ ரமண மகரிஷி

'இறந்து போதல் என்றால் என்ன?

அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.'

இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.

' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.

' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று . இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.


' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது. முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.

' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.

' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா'

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.
ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.


வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது.


............பாலகுமாரனின் எழுத்தில் சக்தி விகடனில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆன்மீகத் தொடர்

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

“அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது”.

உடம்பை, மூளையை முறுக்கி தூக்கத்தில் எழுந்து முற்றிலும் விழித்து, படுக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருப்பது நல்ல பழக்கம். தடாரென்று எழுந்து கொள்வது தவறு. இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன் என்று போர்வைக்குள் சுருண்டு கொள்வதும் முட்டாள்தனம்.

அநேகமாய் நம் எல்லோர் மூளைக்குள்ளும் ஒரு அலாரம் டைம்பீஸ் இருக்கிறது, இத்தனை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அத்தனை மணிக்கு விழித்துக் கொள்கிறது. மூளையைப் பற்றி ஆராய்ந்தெல்லாம் நான் இதைச் சொல்லவில்லை, என் பழக்கத்தை, பிறர் பழக்கத்தை உன்னித்து கவனித்துவிட்டு எழுதுகிறேன். விழிப்பு வந்து தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டதும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நுரையீரல் நிறைய மூச்சு இழுத்துவிட்டு அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். ‘என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான நேரம் இந்த நேரம்தான். மறுபடியும் ஒரு நாள் புலர்ந்து விட்டது. இன்னொருநாள் நான் உயிரோடு இருக்கிறேன். பொழுது புலர்ந்து யாம் செய்த தவத்தால்’. ‘உயிர் வாழ்வது சந்தோஷம் எனில், இது சந்தோஷத்தின் ஆரம்பம்’ இப்படி வார்த்தைகள் உள்ளே தோன்றாதே தவிர, இவ்விதமாய் ஓர் உணர்வு இருக்கும் இன்றைய நாளின் போராட்டம் என்னென்ன என்று மனசுக்குள் ஒரு கணக்கு வரும். செய்ய வேண்டிய முக்கியமான வேலையின் பட்டியல் வரும்.

வேலையின் பரபரப்பு இல்லாமல் வேலையின் முடிவு பற்றி எந்த ஆவேசமும் இல்லாமல் வேலை நல்லபடி முடிக்க வேண்டுமே என்ற கவலை மட்டும் வரும். யாரெல்லாம் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள்.. யார் எல்லாம் எதிரியாக என்னை நினைக்கப் போகிறார்கள் என்கிற யோசனை வரும் போது அவர்களை எப்படி நான் நிதானமாய் அணுகுவது என்று யோசிக்க அந்த நேரம் உகந்தது.

அநேகமாய் ஒரு நாளின் மனோ நிலையை அந்த நேரமே தீர்மானிக்கும் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ, வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோ நிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது. வெளியே இதை நாம் காட்டிக் கொள்ளவில்லை எனினும் உள்ளுக்குள்ளே இந்த உணர்வு தூக்கலாக இருக்கிறது. இரண்டு மூன்று நிமிடம் படுக்கையில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு பிறகு மெல்ல எழுந்து பின் பக்கம் போகலாம்.

காலைக் கடன்கள் கழிப்பது பற்றியெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போவதில்லை மருத்துவ ரீதியான கட்டுரை அல்ல இது. எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சி. உங்களுக்குப் பிடித்தமான ஏதோ ஒரு பானம் பருகி பேப்பரோடு உட்கார்ந்த பிறகு அதிகபட்சமாக கால் மணி நேரம் தினசரியோடு செலவு செய்யுங்கள். பிறகு சட்டென்று குளிக்கப் போய்விடுங்கள். எழுந்து அரை மணிக்குள் குளித்துவிடுவது உத்தமம். எழுந்தவுடனேயே குளிப்பதில் ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது. அதிக நேரம் தள்ளிப் போடுவதில் ஒரு சோம்பேறித்தனம் வருகிறது.

குளிக்கும் தேவையை மனசு உணர்ந்த போது குளித்துவிடுவது நல்லது. தூக்கத்திற்கு பிறகு குளிர்ச்சியான மனம். குளியலுக்குப் பிறகு குளிர்ச்சியான உடம்பு. கண்மூடி அமைதியாய் தியானம் செய்யத் தகுந்த நேரம் இது. பல்வேறு கட்டுரைகளில் இதைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆயினும் இந்தக் கட்டுரையில் விரிவாய் இதைப் பற்றி எழுத விரும்புகிறேன்.

தியானம் என்பது வழிபாட்டு முறை அல்ல மதங்களின் அபிப்பிராயம் அல்ல அல்லது ஒருவிதமான மனப் பயிற்சியோ, மூளையின் வலியை அதிகப்படுத்தும் காரியமோ அல்ல. தியானம் ஒருவித மனநிலை. அன்பும் பணிவும் கலந்த ஒரு மனநிலை. ஒரு விளக்குச் சுடரை நோக்கி தியானம் செய்யுங்கள். நெற்றிக்கு நடுவே ஒரு புள்ளியை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், அந்தப் புள்ளியிலேயே மனதைச் செலுத்துங்கள் என்ற விதமாக எல்லாம் தியானம் சொல்லித் தரப்படுகிறது.

இப்படி சொல்லித் தருவதில் எந்தத் தவறும் இல்லை. பணிவு கலந்த ஒரு வணக்கம் ஏற்படுவதற்காக, இவை உபாயம் கொண்டவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழி தோண்டுவதற்காக மண்வெட்டி பயன்படும். மண்வெட்டி இருக்கிறதே என்று யாரும் குழி தோண்டுவது இல்லை. பணிவு கலந்த வணக்கம் என்பதை மறந்து விட்டு திசை திருப்புவதில் பயன் ஏதும் இல்லை. பணிவு கலந்த வணக்கம் அல்லது அமைதி எப்படி ஏற்படுகிறது என்பதை, ஏற்படவேண்டிய அவசியம் என்ன என்பதை பார்ப்போம்.

Thursday, September 23, 2010

பாலகுமாரன் பேசுகிறார் - பிரகதீஸ்வரம் - ஒரு விஸ்வரூபம்




அந்த கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும் போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி( Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர், தண்ணீரிலா, எண்ணெயிலா, நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை(Oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா.



எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து, சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி, மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது, மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனைப் பேர்.

அத்தனைப் பேரும் ஆண்கள்தானா, கோவில் கட்டுவதில் பெண்களுக்கு பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறி விட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ.

இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா, ஆமெனில், என்ன வைத்தியம், எத்தனை பேருக்கு, எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி, பொன்னா, வெள்ளியா, செப்புகாசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா.

பாதுகாப்பு வீரர்கள் உண்டா, வேலை ஆட்களுக்குள் பிரச்சனையெனில், பஞ்சாயத்து உண்டா, என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா, அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.



யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரியதாய் விரிவடைகிறது. இது கோவிலா, வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின் மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம்.

முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப் பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிருந்து வந்திருக்கிறது. கிட்டதட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர். இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன.

அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று, இத்தனை உயரம், விமானம் கட்ட கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும் மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருந்தும் போது விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும்.

பிறகு...?

மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போது இருக்கிறது. “சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து” என்று சொல்கின்றனரே..வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம், கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும்.

அப்படியானால் சாரப்பள்ளம்.

சாரம் போட, அதாவது மண் பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி? உழைப்பாளிகள் எங்கிருந்து? வேறெதற்கு போர்?

பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா; இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர்,(வெகு காலம் கழித்து ஜெயித்தனர்).

எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம்.

கல் செதுக்க விதவிதமான சிற்பிகள், மேல் பகுதி நீக்க சிலர், தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர், அளவு பார்த்து அடுக்க சில்ர, கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.

உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரியகல்தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. ‘சாவா மூவா பேராடுகள்’ என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தொன்னூற்றாறு ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும்.

நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக்கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் உற்றுபவர் உண்டு.

கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன, துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்க்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர்.(Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்த்தால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள இரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார், யார். அவருக்கென்று வீடு ஓதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. ‘இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் ‘என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்களும் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது.



முதல் தானம் ராஜராஜனுடையது.
நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்’ என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடது பக்க பெரிய கொண்டையோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான,மிக அழகான கறுப்பு, இச்வப்பு, மாநிறம் கொண்ட தேவரடியர்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள், ஒன்று போல் ஒன்று இல்லை, உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாக்த் தெரியும் ஒரு உலோகம்.

மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா, கலைஞர்கள் செய்திறனா. இல்லை பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில் சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன.



கண்ணப்பநாயனார். பூசலார், கண்டேஸ்வரர், மன்மத தகனம் என்று முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்ன வித கோவில்.

விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகமவிதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வான்ம ஒரு சிவலிங்கம். விமாத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம்.

இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், ‘தென்திசை மேரு’ உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல், கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டு வந்து விட்ட உடையார் பெரிய உடையார். இது போதுமா கடவுளைச் சொல்ல,



ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் காட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் காலுக்கு அருகில் கதை, கதையைச் சுற்றி மலைப் பாம்பு, மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர். அவர் கை ‘விஸ்மயம்’ என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது.

விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம்.

அதுவும் விஸ்வரூபம். இன்றளவும்.

Tuesday, September 7, 2010

சூரியனோடு சில நாட்கள் -7

சூரியனோடு சில நாட்கள் என்று இந்த கட்டுரை எழுதும்போது டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு நடிகருடைய செல்வாக்கு எவ்வளவு உன்னதமாக இருந்தாலும், இயக்குனர் பலமாக இல்லையேல், திறமையான டெக்னீஷியனாகப் பரிமக்கவில்லையெனில் ஒரு திரைப்படம் சிறப்பான முறையில் திரைப்படம் வெளிவராவிட்டால் மிக உன்னதமான நடிகரின் நிலை கூட ஆட்டம் காணும். நல்ல டைரக்டர்களுக்காக நடிகர்கள் ஏங்குவது திரைப்பட நடிகர்களின் இயல்பு.

நாலு பேரிடம் வேலை வாங்கி கோர்ப்பதுதான் டைரக்டரின் வேலை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு வேண்டியதை மற்ற கலைஞர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். ஐந்து டியூனில் எந்த டியூன் பிடிக்கிறது என்றால் இந்த ரெண்டு டியூன் என்று குழந்தை கூட சொல்லி விடும். அந்த ரெண்டு டியூனில் எது நல்ல டியூன் என்று சொல்ல சிறிதளவு புத்தி போதும்.

சங்கீதமாவது சினிமாப் பாடல்கள் மூலம் காதுக்குள் புகுந்த விஷயம். ஆனால், நடனம் இன்னும் கடினம். ஒரு படத்தின் வெற்றியை இன்றைய காலகட்டத்தில் நடனமும் சேர்ந்து தீர்மானிக்கிறது. சமீபத்தில் பல படங்களின் வெற்றிக்கு நடனம் தெரிந்த நடிகர்களின் திறமையே காரணமாக இருந்திருக்கிறது.

இன்றைய டைரக்டர்களிடையே சுரேஷ்கிருஷ்ணா வித்தியாசமானவர். அமைதியான திறமைசாலி. திரைக்கதையை பாட்ஷ படத்திற்காக உருவாக்கி ரஜினிகாந்த்தோடு விவாதித்து பிறகு என்னிடம் சொல்வார். நான் அந்தக் காட்சியை மனதில் வாங்கிக் கொண்டு வசனங்களாக்கி அவருக்கு தருவேன். அது மறுபடி ரஜினிகாந்திற்கு போகும். எங்களையெல்லாம் விட மிக உயரத்தில் ரஜினிகாந்த் இருந்தாலும் திரையுலக சம்பிரதாயங்களை அவர் மீறுவதில்லை. டைரக்டரே படப்பிடிப்புத் தளத்தின் முதன்மையானவர் என்பதை அவர் மறுத்ததேயில்லை.

சுரேஷ்..சுரேஷ் என்று ஐந்து நிமிடத்துக்கொரு முறை அவர் பரபரப்பதே இதற்கு சாட்சி. டைரக்டர் என்ற மரியாதை மட்டுமல்லாது மிக சுகமான ஒரு வாஞ்சையும் அதில் இருக்கும். பாட்ஷ திரைப்படத்தில் மாணிக்பாட்ஷவிற்கும் அவருடைய தகப்பனான விஜயகுமாருக்கும் எந்தவிதமான உறவு சரி என்பதில் விவாதம் வந்தது. சுமூகமான உறவா, ச்சீபோ..என்று சீறும் உறவா என்று தீர்மானிப்பதில் பிரச்சனை வந்தது.

‘வளர்க்க வேண்டிய விதத்துல நீ வளர்த்திருந்தா இந்த மாணிக்கம் மாணிக்பாட்ஷவாயிருக்க மாட்டான். திருடன் கிட்ட வேலைக்கு சேர்ந்தவனுக்கு, பெத்த புள்ளையபத்தி என்னா அக்கறை இருக்கும்.. வீட்ல இருக்கற குழந்தைங்களுக்கு வயத்துக்கு சோறு போட்டா மட்டும் அவன் அப்பனாயிட முடியாது. அவங்க வாழ்க்கை நல்லபடியா அமையணும்னு யோசிக்கிற வந்தான் அப்பனாக முடியும். அன்பு காட்டறவந்தான் அதிகாரம் பண்ணலாம். நீ அப்பாங்கறா ஒரே காரணத்துக்காக என்மேல் அதிகாரம் காட்டற, இதை நான் ஒத்துக்க முடியாது..’ என்கிற விதமாய் காட்சி இருந்தது.

இந்தக் காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் கொண்ட சுரேஷ் படப்பிடிப்பு நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் இப்போது சொன்னீர்களே.. இப்படி இருக்கக்கூடாது...’ என்று ரஜினிகாந்திடம் சொன்னார்.

எனக்கு இந்த வாதம் புரியவில்லை. என்ன வேண்டும் என்று சொன்னால் அதற்கேற்ற விதமாய் எழுதித் தரலாம். அல்லது பல்வேறு விதமாக யோசித்துப் பாருங்கள் என்றும் சொல்லலாம். சுரேஷ் சொல்வது சிக்கலான விஷயமாகத் தோன்றியது. ரஜினிகாந்த் அவர்களுக்கு தந்தையைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டுவதே சரி என்று பட்டது. சுரேஷ் அதைத் தீவிரமாக மறுத்தார்.

"உண்மையிலேயே மாணிக்கம் அப்பா கெட்டவரா இருந்தாகூட மாணிக்கம் அவரைக் கடுமையாகப் பேசமாட்டான். முதல் காரணம் விஜயகுமார் நிர்பந்தத்தால் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்.. அதுவும் குடும்பத்திற்காக. இரண்டாவது ரஜினிகாந்த் என்ற நடிகர் தகப்பனை எதிர்த்துப் பேசக்கூடாது. அது மோசமான முன்னுதாரணமாய் அமையும்.

மூன்றாவது மாணிக்பாட்ஷவிற்கு வில்லன் மீது கோபமேயொழிய வில்லனிடம் வேலை செய்யும் தகப்பனிடம் எந்தக் கோபமும் இல்லை. நான்காவது இரண்டு துருவங்களாக தந்தையும் மகனும் சந்திக்கும் போது இப்படி பிரிந்து விட்டோமே என்கிற வேதனைத் தான் இருக்குமே தவிர குற்றம் சாட்டல் இருக்காது. என்ன விதமான நெகிழ்வு என்பதே என் கேள்வி" என்று சுரேஷ்கிருஷ்ணா சொன்னார். படப்பிடிப்பு தளத்தில் அது வேகமான விவாதமாக வளர்ந்து விட்டது.



ரஜினிகாந்த் முரட்டுத்தனமாய் இதுதான் காட்சி என்று சொல்லியிருக்கலாம். சொல்லுகின்ற செல்வாக்கு அவரிடம் நிச்சயம் உண்டு. ரஜினிகாந்த் சட்டென்று விட்டுக் கொடுத்தார். “இந்தக் காட்சி எப்படியும் இருக்கலாம். சுரேஷ் உன் லாஜிக்கும் சரி. என்னுடைய லாஜிக்கும் சரி. ஆனால உன் லாஜிக்கின்படியே இருக்கட்டும்.” உதவி டைரக்டர்களுக்கு முன்னால், தயாரிப்பு நிர்வாகிகளுக்கு முன்னால், நடிகர் விஜயகுமாருக்கும், எனக்கும் முன்னால் மிகக் சுலபமாக அவர் விட்டுக் கொடுத்தார். சுரேஷ் கிருஷ்ணாவின் மதிப்பு அங்கே சட்டென்று உயர்ந்தது.

இப்படி சட்டென்று விட்டுக் கொடுத்து விட்டீர்களே என்று வேறு ஒருவர் எடுத்துக்காட்டி கேட்டபோது, “டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்பதுதான் நடிகருக்கு நல்லது. சுரேஷ்கிருஷ்ணா என் மீது மிகுந்த மரியாதை உடையவர். அனுசரித்து போகக் கூடியவர். அதே சமயம் அவருக்கு சரி என்று தோன்றக்கூடியதைத் தயங்காமல் சொல்லக் கூடியவர். காரணமில்லாமல் சுரேஷ்கிருஷ்ணா வாதாட மாட்டார். அவர் மனதில் இந்தக் காட்சி பற்றி ஒரு தெளிவு இருக்கிறது. அதை நான் ஏன் கெடுக்க வேண்டும்”.

இந்த இடத்தில் ரஜினிகாந்த் சொன்னது ஒன்று ஞாபகம் வந்தது. “என்னை மதித்து, என் சொல்,பேச்சை பலர் கேட்கிறார்கள் , கேட்கிறார்கள் என்பதற்காகவே நான் அதிகம் ஆடி விடக் கூடாது. பாட்ஷ நன்றாக வர வேண்டும் என்கிற அக்கறை சுரேஷ்கிருஷ்ணாவுக்கும் உண்டு. அந்த அக்கறையை நான் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது. சினிமா கூட்டு முயற்சி, இது டீம் ஓர்க் என்பதை எப்போதும் எல்லோரும் ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும். இன்று பிரபலமாகி விட்டேன் என்பதாலேயே எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து விடக்கூடாது”.

சில கேள்விகள் - பாலகுமாரன் பதில்கள்

கண்ணும் காதுமில்லாதது காதல் என்று ஒன்றுமில்லாத காதலுக்காக உயிரை விடுகிறார்களே?

நீங்கள் காதலித்ததில்லை. காதல் ஒன்றுமில்லாதது என்று எவரேனும் சொன்னால் அவரை விட முட்டாள் எவரும் இல்லை என்பது என்னுடைய அபிப்ராயம். தன்னை மட்டும் யோசித்துக் கொண்டிருந்த மனிதரை ஒருமுகப்படுத்தி, தன்னைப் போல் இன்னொருவரையும் யோசிக்க வைக்கின்ற ஒரு முயற்சி தான் காதல். இதற்கு காரணங்கள் பல்வேறாக இருந்தாலும், இந்த முயற்சியில் பல பேர் கனிந்து விடுகிறார்கள். நல்ல மலர்ச்சியை அடைந்து விடுகிறார்கள். காதல் உண்மையாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் தந்திரமாக இருப்பது போல காதலில் தந்திரமாக இருப்பவன் தான் உயிரை விடுகிறான். ஏனெனில் ஏமாற்ற ஆசைப்படுகிறவன் தான் ஏமாறுகிறான்.

ஐயா, உங்களுடைய பலம் என்று எதை முக்கியமாகக் கருதுகிறீர்கள்.

அவமானத்திற்கு அஞ்சாதது. எதையும் பரீட்சித்து பார்ப்பது. வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலையில்லை. எல்லாமுமே ஒரு அனுபவம் என்று முழு மனதாக இறங்கி விடுவது. வாழ்க்கையில் ஏற்பட்ட நல்ல அனுபவங்களும், மிக மோசமான அனுபவங்களும் தான் என்னை நன்றாக பக்குவப்படுத்தியிருக்கின்றன. இல்லையெனில் தொட்டாச்சிணுங்கியாக இருந்திருப்பேன். என்னுடைய கதைகள் பலதும் உண்மைச்செறிவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என் அனுபவங்கள். நான் வெறும் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு கயிறு திரிப்பவன் அல்ல.



இவ்வளவு ஆன்மீகம் எழுதுகிறீர்களே, நீங்கள் துறவியாகி விடுவீர்களா?

அது நேருமாயின் நேரட்டும். துறவியாக வேண்டும் என்கிற ஆசை ஏதுமில்லை. ஆகக்கூடாது என்கிற பிடிவாதமும் இல்லை. என் அபிப்ராயத்தில் அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் வெளிவேஷம்.


ஒரு மூலையில் உட்கார்ந்து வெறுமே மந்திர ஜபம் செய்தால் சிறந்துவிட முடியுமா. இது மூடநம்பிக்கையாக உங்களுக்குப் படவில்லையா. இதை எப்படி ஆதரித்து கதை எழுதுகிறீர்கள்.

பறக்க முடியுமா என்று மனிதன் யோசித்து, யோசித்து இடையறாது பல நூற்றாண்டுகள் முயற்சி செய்து இப்பொழுது வானம் முழுவதும் அவன் ஆட்சி செய்கிறான். பூமிதாண்டியும் பல கிரகங்களில் போய் கால் வைக்கிறான். முடியுமா என்று கேட்கிறபோதே முடியும் என்கிற நம்பிக்கையும் அதற்கான முயற்சியும் அவசியம். மந்திரஜபம் என்ன செய்யும் என்று மந்திரஜபம் செய்துவிட்டு பேசவேண்டும். வெறுமே எல்லாம் தெரிந்தது போல அலட்டக் கூடாது.

காமத்தை ஜெயிப்பது எப்படி.

ஏன் ஜெயிக்க வேண்டும். தட்டிக் கொடுத்து அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எங்கும் தவறாகப் போய்விடாதே என்று பிரியமாய் அதை உன்னித்து கவனித்தபடி இருக்க வேண்டும். காமத்தை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை. உண்ணுதல்போலும், உறங்குதல்போலும் அது சாதாரணமானது.